கிளிநொச்சி தொடருந்து நிலைய தமிழினப்படுகொலை – 25.01.1986

You are currently viewing கிளிநொச்சி தொடருந்து நிலைய தமிழினப்படுகொலை – 25.01.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் மையமாக விளங்குவது கிளிநொச்சி நகரமாகும். இம்மாவட்ட மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் நகருக்கு வருவதனால், கிளிநொச்சி நகரம் ஒரு முதன்மையான இடமாக இருந்தது. பாடசாலை, சந்தை, தொடருந்து நிலையம், வைத்தியசாலை மற்றும் கச்சேரி என்பன நகரத்திலே அமைந்திருந்தன.

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள விடுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் நகருக்கு வரும் பொதுமக்களை விசாரித்தல், கைது செய்தல், அச்சுறுத்துதல் எனப் பல வழிகளிலும் பொதுமக்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

1986 ஜனவரி இருபத்தைந்தாம் நாள் நண்பகல் 12.00 மணியளவில் கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினர் கிளிநொச்சி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தெற்குப் புறமாக நின்ற பாலை மரங்களுள் ஒளிந்திருந்தார்கள்.

அதேநேரம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிவந்த தொடருந்து கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் வந்து தரித்து நின்றது. பயணிகள் தொடருந்தில் ஏறிக்கொண்டிருந்த சமயம் மறைந்திருந்த படையினர் திடீரென பட பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். மக்கள் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினார்கள். ஏனையோர் தொடருந்து நிலையத்திற்குள்ளும், தொடருந்தின் இரு புறமும் படுத்துக் கொண்டார்கள். இச் சம்பவத்தில் நான்கு பெண்கள், இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் பன்னிரண்டு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

இச்சம்பவத்தில் காயமடைந்ததுடன், மனைவியையும் மகனையும் இழந்த சின்னையன் நல்லையா என்பவர் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில்:

நான் விவசாயம் செய்து வருகின்றேன். எனக்கு நான்கு பிள்ளைகள். இராணுவத்தின் பிரச்சினையால் இடம்பெயர்ந்து அக்கராயன் எட்டாம் கட்டையில் ஒரு தேவாலயத்திற் போய் இருந்தோம். அதன்பின்னர் கிடைத்த ஒரு வீட்டில் வசித்து வந்தோம். எனது மனைவி ஆசிரியையாக இருந்ததால் கல்வித் திணைக்களத்திலிருந்து அநுராதபுரம் வேலைமாற்றல் கடிதம் வந்தது தைப்பொங்கல் முடிந்த பின்னர், 1986 ஆம் ஆண்டு தை மாதம் இருபத்தைந்தாம் திகதி திங்கட்கிழமை பேருந்து ஒன்றும் கிடைக்காததால், தொடருந்தில் செல்ல அங்கு வந்தோம்.

அதேநேரம் அங்கு பல இடங்களிலிருந்தும் வந்த மக்களும் நின்றிருந்தார்கள். சரியாக பகல் 12.00 மணியிருக்கும் வாங்குகளில் நாங்கள் இருக்கும்போது சந்தைக்குப் பக்கத்தில் வந்த ஒன்பதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் திருவேல் என்பவரையும் அவரின் தகப்பனான கோழி வியாபாரியையும் சுட்டுவிட்டு தொடருந்துநிலைய வீதியால் வந்தார்கள். அந்த நேரம் நாங்கள் தொடருந்து நிலையத்தில்  பயணிகள் ஏறும் இடத்தில் நின்றிருந்தோம். இராணுவத்தினர் அனைவரும் தோள்களில் துப்பாக்கியைக் கொழுவியிருந்தார்கள்.  நாங்கள் அனைவரும் பிரயாணம் செய்வதற்காக வந்தவர்கள் என்று பெரிதாகச் சொன்னோம். அப்போது அவர்கள் விரலைக் காட்டி உங்கள் எல்லோரையும் கொல்வோம் என்று சொல்லி முடிக்கு முன்னரே எம்மை நோக்கிப் திடீரென சரமாரியாகச் சுட்டார்கள். அந்த இடம் ஒரே வெளியாக இருந்ததால், நாங்கள் எங்கே செல்வதென்று தெரியாமல் தொடருந்து நிலையத்தில் பொருட்கள் வைக்கும் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டோம். எல்லோரும் அதிலேயே காயப்பட்டார்கள்.

அதன் பின்னர் என்ன நடந்ததென்று எதுவும் தெரியாது. ஒரு மணித்தியாலத்தில் பின்னர் 1.30 மணியிருக்கும் சரியான தாகமாக இருந்தது. தண்ணீர் தண்ணீர் என்று கத்தினேன். அந்த நேரம் எனக்கு மேல் இரண்டு பேர் இறந்து கிடந்தார்கள். அதனால் கை மற்றும் கால்களை எடுக்க இயலாது இருந்தது. எல்லா இரத்தமும் ஓடியதால் காதுகள் எல்லாம் அடைத்திருந்தது. திரும்பவும் தண்ணீர் தண்ணீர் எனக் கத்தியபோது எனது ஐந்து வயது மகன் சுவர்க்கரையாக இருந்து எழும்பினார். அவருக்குக் கையில் துப்பாக்கிச் சன்னம் பட்டு கை சிதைந்துபோயிருந்தது. மற்றைய பக்கம் திரும்பிப் பார்த்தபோது அந்த மூலைக்குள் என்னுடைய மூன்றாவது மகன் இறந்த ஒரு பெண்ணின் மேல் தொங்கிக்கொண்டிருந்தார். எனது மனைவி எனக்கு நேராக விழுந்து கிடந்தார். ஏனைய மக்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தார்கள். ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது. இன்னொரு பக்கத்தில் சாந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர் காலிற் காயம் பட்டுக் கத்திக்கொண்டிருந்தார். அப்போது என்னுடைய மகன்தான் பானைக்குள்ளிருந்த தண்ணீரை எடுத்துத் தர அதைக் குடித்தேன். அதன் பின்னர் அப்படியே மயங்கிவிட்டேன். அதற்குப் பின்னர் என்ன நடந்ததென்று தெரியாது.

பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் முழித்துப் பார்த்தேன். அதன் பின்பு தான் என்னிடம் வந்த தாதிமார் நடந்தவற்றைச் சொல்லித்தான் எனது மனைவியும் பிள்ளையும் இறந்தது பற்றிக் கேள்விப்பட்டேன். இறந்த எனது மனைவி மற்றும் ஒரு மகனையும் என்னுடனேயே கொண்டு வந்திருந்தார்கள். ஆனால், இருவரும் இறந்ததால் உடனடியாக கிளிநொச்சிக்குக் கொண்டு போய் விட்டார்கள். எனது உடம்பெல்லாம் காயம்பட்டதனால் நான் தப்பமாட்டேன் எனப் பலரும் சொன்னார்கள். ஏதோ தெய்வாதீனமாக உயிர் தப்பிவிட்டேன். என்னால் அவர்களின் மரணச் சடங்கிற்கூடக் கலந்துகொள்ள முடியாத நிலையில் அவாக்ளின் உடலை எனது மைத்துனர்  தான் முறைபப்டி அடக்கம் செய்தார்.

இயங்க முடியாத நிலையில் இருந்தேன். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். அங்கும் கையும் காலும் கழற்ற வேண்டும் என்றே சொன்னார்கள். பின்பு அதற்குச் சம்மதிக்காததால், நீண்ட நாட்களிற்குப் பின்பு உடல் தேறினேன். இப்பவும் என்னால் ஒரு தண்ணீர் வாளியைக் கூடத் தூக்கமுடியாத நிலையில் கஸ்ரப்படுகின்றேன். அந்தச் சம்பவத்திற்குப் பின்பு என் மகன்மார் தான் என்னைப் பார்க்கிறார்கள். முன்புபோல் வயல்வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளைச் செய்யவோ முடியாத நிலையில் இருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் வேதனைப்படும் போதும் எமதினத்தின் விதியை நினைத்தே கவலைப்படுவேன்.

இச்சம்பவத்தில் காயமடைந்த சாந்தபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் ஆறுமுகம் சம்பவம் பற்றிக் கூறுகையில்:

என்னுடைய சொந்த ஊரான  கண்டிக்குப் போய் 25.01.1986 ம் திகதி திரும்பி வந்து கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் இறங்கி நின்றேன். அந்த நேரம் இராணுவத்தினர் தொடருந்தில் போவதற்கு நின்ற பொதுமக்கள் மீது திடீரெனச் சுட்டார்கள். தொடருந்து நிலையத்திற்குப் பின்புறமுள்ள கிணற்றடியில் நின்ற இரு இராணுவத்தினரே சுட்டார்கள். அப்போது எனக்கு சன்னங்கள் கையிலும் காலிலும் பட்டவுடன் நான் கீழே விழுந்து விட்டேன்.  எழும்ப முயற்சி செய்தபோது என்னால் முடியவில்லை. அப்போது தான் உணர்ந்தேன் எனது இரண்டு கையும் காலும் முறிந்து விட்டதென்று . கண்விழித்துப் பார்த்தபோது வைத்தியசாலையிலிருப்பதைப் புரிந்துகொண்டேன். எனது காயத்திற்குச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அடுத்த நாள் விடியற்காலை தான் பூரணமாக நினைவு திரும்பியது. அதன்பின் ஏன் இராணுவத்தினர் எம்மீது சுட்டார்கள் என வினாவிய போது துப்பாக்கிச் சூடு நடத்திய படைச் சிப்பாய்க்கு மூளை சுகமில்லை என்று அப்போது கிளிநொச்சியில் இராணுவத் தளபதியாக இருந்த கொப்பெக்கடுவ கூறியிருந்ததாகக் கூறினார்கள். ஆனால் இரண்டிற்கு மேற்பட்ட இராணுவத்தினர் எம்மீது தாக்குதல் நடத்திவிட்டு இவ்வாறு கூறியது தமிழர்களை அழிக்கவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுச் செயற்படுவதை உறுதிப்படுத்துகின்றது.

அரசாங்கம் இச்சம்பவம் தொடர்பாகப் பின்வருமாறு தெரிவித்தது.

“மனநோயாளியான படைச்சிப்பாய் சுட்டதில் கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் பொதுமக்கள் பலியானார்கள். இதற்காக அரசாங்கம் மன்னிப்புக் கோருகின்றது.” என்று கூறியதைத் தவிர அரசாங்கம் மேற்கொண்டு எதுவித நடவடிக்கையையும்   மேற்கொள்ளவில்லை.

25.01.1986 அன்று கிளிநொச்சி தொடருந்து நிலையப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. சோமசேகரம் ஜெயசீலன் (வயது 16 – மாணவன்)
  2. தவராசா சின்னமணி (வயது 40 – வீட்டுப்பணி)
  3. தவராசா சுகந்தினி (வயது 11 – சிறுமி)
  4. துரைசாமி கதிர்காமு (வயது 18 – நீர்பாசனத் தொழிலாளி)
  5. பாண்டியன் சிவகுரு (வயது 26 – வியாபாரம்)
  6. குலசேகரம் தங்கம்மா (வயது 64)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply