கிளிநொச்சி ஜெயபுரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள படைமுகாமில் இருந்து சிறிலங்கா படைச் சிப்பாய் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையிலேயே இவர் நேற்றைய தினம் (25) மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்தமையினால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தின் பெயரில் பரிசோதனைக்காக அவரது இரத்த மாதிரி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயபுரம் இராணுவ முகாமில் தங்கியிருந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதான மேற்படி படைச் சிப்பாய் இம் மாதம் ஆரம்பத்தில் விடுமுறையில் வீடு சென்று கடந்த 14 தினங்களிற்கு முன்பே மீண்டும் முகாமிற்கு திரும்பியுள்ளார்.
கொரோனா நடைமுறைகளின் அடிப்படையில் முகாமுல் தனிமைப் படுத்தலில் இருந்த அவர் நேற்றுக்காலை முகாமில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உன்னடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, உயிரிழப்பிற்கு கொரோனா காரணமாக எனக் கண்டறியும் நோக்கில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில் சடலம் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.