கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 6 கோவிட் மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கல்முனையில் அதிக தொற்றாளர்களாக 69 நபர்களும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 50, திருகோணமலை 13, அம்பாறையில் 12 எனவும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் 3 மரணங்கள், மட்டக்களப்பு 01, கல்முனை 02 என ஆறு மரணங்களும் பதிவாகிதுள்ளது. மொத்தமாக மூன்றாம் அலையின் பின் 13457 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள். 304 மரணங்களும் மொத்தமாக கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல், முகக்கவசம் அணிதல் ,கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலங்கள் விடுமுறை மற்றும் பண்டிகை ,பெருநாள் காலமாகையால் தேவையற்ற ஒன்று கூடல்கள் வெளிச் செல்லல் என்பனவற்றை தவிர்க்கவும், இலங்கையில் மிக வேகமாக கொழும்பு பகுதிகளில் புதிய வகை டெல்டா வைரஸ் பரவுவதாக பேசப்பட்டு வருகிறது.
இவ்வாறான நோய் தாக்கத்தில் இருந்தும் பாதுகாப்புப் பெற முன்கூட்டிய சுகாதார வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.எதிர்வரும் சனிக்கிழமை முதல் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், இதனை பெற உரிய பொது சுகாதார பரிசோதகர் ,கிராம சேவகர் ஆகியோர்களை அணுகி உரிய இடங்களை தீர்மானித்து தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் தெரிவித்தார்.