ரஷ்ய எல்லைநாடுகளான “பல்கெரியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா” ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மேலதிக நேட்டோ படைகளை நிலைநிறுத்துவதற்கு நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதை கடுமையாக நோக்கும் ரஷ்யா, இந்நகர்வு மிக ஆபத்தானது என தெரிவித்துள்ளதோடு, ஐரோப்பாவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் நேட்டோ இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
“Brussels” இல் நேற்று, 24.03.2022 நடந்த நேட்டோவின் அவசர சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளிலும் நேட்டோ படையினரை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து கருத்துரைத்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் “Maria Zakharova”, நேட்டோவின் மேற்படி நகர்வுகள், அதன் தீவிர ரஷ்ய எதிர்ப்பு நிலையை காட்டுவதாகவும், நேட்டோவின் அங்கத்துவநாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதும், ஐரோப்பாவை சீர்குலைக்கும் நேட்டோவின் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளதாகவும் காட்டமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நேட்டோவின் தரை, வான்வழி ஆயுதப்படையினர் 40.000 இவ்வாறு நான்கு நாடுகளிலும் நிலைநிறுத்தப்படுவதாக நேட்டோ மேலும் அறிவித்துள்ள நிலையில், சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப்பின், ரஷ்யாவுக்கு 1990 இல் நேட்டோ வழங்கியிருந்த உறுதிமொழிகளை, கடந்த 25 ஆண்டுகளில் 14 முறை மீறியுள்ள நேட்டோ கூட்டமைப்பு, 1990 இல் உடன்பாடு காணப்பட்டதையும் மீறி, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய எல்லைவரை தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியமை, இன்றைய உக்ரைனிய இராணுவநடவடிக்கையின் பிரதான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.