மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நினைவு தினம் இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 157 பேர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் காணாமல்ஆக்கப்பட்ட தினம் கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நினைவு தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“அரசே கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தினை உடன் நீக்கு,எங்கே எங்கே உறவுகள் எங்கே,எமக்கு எமது உறவுகள் வேண்டும், எமக்கு நீதி விசாரணை வேண்டும்,எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும்,1990-09-05அன்று வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் எங்கே”போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுரைகளும் நடைபெற்றன.
கிழக்கு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களில், சிறுவர்கள்,முதியவர்கள் இளைஞர்கள் என பலர் காணாமல்ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.