கீரிமலை கடற்கரையில் நாவலர் சிலை திறந்து வைப்பு!

You are currently viewing கீரிமலை கடற்கரையில் நாவலர் சிலை திறந்து வைப்பு!

கீரிமலை கடற்கரையில் நேற்று மாலை 5மணிக்கு நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியால்,இந்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்.

இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர்.

அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது.

சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

சிவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply