கொரோனா எதிரொலியாக ஊரடங்கு அமலான சூழலில் குடும்ப வன்முறை சம்பவங்களால் பிருத்தானியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன் நகர் முழுவதும், கடந்த ஏப்ரல் 19ந் திகதி வரை 6 வாரங்களில், ஒரு நாளுக்கு சராசரியாக 100 என்ற எண்ணிக்கையுடன் 4 ஆயிரத்து 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 வாரங்களில் குடும்ப வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய புகார் பற்றிய அழைப்புகள் 3 பங்கு அதிகரித்துள்ளன என்று லண்டன் பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்பொழுது, கடந்த மார்ச் 9ந் திகதியில் இருந்து இதுவரை, புகார்கள் 24 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளன.
இவற்றில் குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் பற்றிய புகார்கள் கடந்த வருடத்தில் இருந்து 3 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளன. இவை குற்ற வழக்குகளாக பதிவு செய்யப்படுவதில்லை. எனினும், இந்த புகார் எண்ணிக்கை கடந்த மார்ச் 9ந் திகதி யில் இருந்து ஏப்ரல் 19ந் திகதி வரையில் 9 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது.
லண்டனில் குடும்ப சண்டையில் இரு கொலைகளும் நடந்துள்ளன. பிருத்தானியாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.