சுற்றுலாவுக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர்பெற்ற உக்ரைனின் மரியுபோல் நகரம் தற்போது சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய மக்களின் நிலை பரிதாப கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் திணறிய ரஷ்ய துருப்புகள், மொத்த கோபத்தையும் துறைமுக நகரமான மரியுபோலில் காட்டினர். இதனால் மரியுபோல் நகரம் சின்னாபின்னமானது.
ரஷ்யாவின் உக்கிர தாக்குதலால் மண் மேடானது குடியிருப்புகள். ரஷ்ய துருப்புகள் தற்போது மரியுபோல் நகரில் இருந்து வெளியேறியிருந்தாலும், சடலங்கள் மீட்கப்படாமல் காணப்படுவதாகவும், துண்டான உடல் பாகங்கள் அழுகிய நிலையில் தெருவில் அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் கழிவு நீரையே குடிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இருப்பினும் உக்ரைன் அரசு மீட்பு நடவடிக்கைகள் உட்பட நகரின் மறுகட்டமைப்புக்கான பணிகளை மெதுவாக துவங்கியுள்ளது.
ஆனால் போதிய உதவியை மரியுபோல் நகர மக்களுக்கு செய்ய முடியாமல் உள்ளது எனவும், மருத்துவ உதவிகளுக்காக மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. சடலங்கள் தற்போது பெரும்பாலும் கல்லறைகளில் புதைக்கப்படுவதை விட குப்பை குவியல்களில் அழுகுவதற்கு விடப்படுகின்றன.
தேவையான மருந்து எதுவும் இல்லாமல் மருத்துவர்கள் சிகிச்சை முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். நகரத்தில் உள்ள கட்டிடங்களில் குறைந்தது 90 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது அல்லது சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, குறைந்தது 300,000 பொதுமக்கள் தப்பியோடியுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது. ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறியிருந்தாலும், இங்குள்ள எஞ்சிய மக்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
பல ஆண்டுகளாக அறிமுகமான மக்கள், தற்போது முற்றிலும் அடையாளம் தெரியாமல் போயுள்ளனர் என அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கண்கலங்கியுள்ளார். ரஷ்ய தாக்குதலால் சேதமடைந்துள்ள குடியிருப்புகளை சுத்தப்படுத்டும் பணியின் போது ஒவ்வொரு நாளும் சடலங்கள் மீட்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
பலரது சடலங்கள் இதுவரை உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படவே இல்லை என தெரிவிக்கின்றார் அந்த அதிகாரி. மரியுபோல் மேயர் வாடிம் போயிச்சென்கோ தெரிவிக்கையில்,
நகரத்தில் உள்ள ஒவ்வொரு பாழடைந்த கட்டிடத்தின் கீழும் 50 முதல் 100 உடல்கள் காணப்படலாம் மதிப்பிட்டுள்ளார். 1,300 கட்டிடங்கள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாக வாடிம் போயிச்சென்கோ தெரிவித்துள்ளார்.