குருந்தூர்மலையில் விகாரை கட்டுமானங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

You are currently viewing குருந்தூர்மலையில் விகாரை கட்டுமானங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு நேற்று நீதிமன்றில் முல்லைதீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர்கள் சார்பில் சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி கெங்காதரன் ஆகியோர் முன்னிலையாகியதோடு எதிர்தரப்பிலே பொலிஸார் மன்றில் முன்னிலையாகினர். இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் வழக்கினுடைய கட்டளையை வழங்கினார்.

குறித்த கட்டளை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆதிசிவன் அய்யனார் ஆலய தமிழ் மக்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலேயே AR 673/18 என்ற குருந்தூர் மலை தொடர்பான வழக்குக்கான கட்டளை வழங்கப்பட்டது. இந்த வழக்கினுடைய கட்டளை கௌரவ முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பிலே இரு தரப்பு வாதங்களையும் உய்த்தறிந்த நீதிபதி அவர்கள் புதிதாக குறுந்தூர் மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரை, சிலைகள் மற்றும் சுருவங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் எனவும் கட்டளை ஆக்கி இருக்கின்றார். மேலும் இந்த புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றியதன் பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு பொலிசாரக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியிருக்கின்றது.

மேலும் குறித்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால் அந்த பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கையிடுமாறு தொல்லியல் துணைக்களத்துக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த கட்டளையிலே பாரம்பரியமாக முல்லைத்தீவு குருந்தூர் மலையிலே ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தாம் செய்து வருகின்ற பூசை வழிபாடு நிகழ்வுகளை எந்த விதத்திலும் யாரும் தடுக்கக்கூடாது என்ற கட்டளையும் தொடர்ந்து அந்த இடத்திலேயே சமாதான குலைவு ஏற்படாத வகையிலே சிறீலங்கா காவற்துறையினர் தமது பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கி இருக்கிறது என தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply