முள்ளிவாய்க்காலும், போரிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்தவேண்டும் என்பதை நினைவுறுத்தும் அடையாளங்களாகப் பார்க்கப்படவேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த 18 ஆம் திகதியன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தொழில் கட்சியின் தலைவர் கியர் ஸ்ராமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரையும், அங்கு இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோரையும் நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் நினைவுகூருகின்றோம். தமக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வலியுடன் இன்னமும் வாழ்ந்துவரும் பாதிக்கப்பட்ட தரப்பினரையும், மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தோரையும், அவர்களது அன்புக்குரியவர்களையும் இவ்வேளையில் நினைவுகூருகின்றேன்.
அதேவேளை முள்ளிவாய்க்காலும், போரிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்தவேண்டும் என்பதை நினைவுறுத்தும் அடையாளங்களாகப் பார்க்கப்படவேண்டும்.
இத்தகையதோர் நாளில் தமிழ்மக்களுக்கான நிலையான சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை நோக்கி தொழிற்கட்சி தொடர்ந்து இயங்கும் என உறுதியளிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.