கூட்டமைப்பின் தீர்மானம் கண்துடைப்பு நாடகம்?

You are currently viewing கூட்டமைப்பின் தீர்மானம் கண்துடைப்பு நாடகம்?

ஐ.நா தீர்மானத்தை இலங்கை மீறினாலும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் தீர்மானம்
கண் துடைப்பாகும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (24) இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்கு நீதி வேண்டி இன்று நாம் சர்வதேசத்திடம் நிற்கின்றோம். இலங்கை அரசு எமக்கு நீதியினை பெற்று தரும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். இலங்கை அரசு எமது பிள்ளைகள் தொடர்பான நீதியை எமக்கு பெற்று தராது.

ஓ.எம்.பி.அலுவலகத்தை நிறுவி அதன் ஊடாக சில உதவிகளை வழங்கி எம்மை ஏமாற்ற நினைக்கின்றது இலங்கை அரசு. ஆனால் நாம் சர்வதேசத்தை நம்பி நிற்கின்றோம். இலங்கை அரசுடன் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது.

கூட்டமைப்பு எமக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசுக்கு கால நீடிப்பினை பெற்றுக்கொடுத்துள்ளது. அரசுடன் இணைந்து ஓ.எம்.பி.அலுவலகத்தை திறந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏமாற்ற கூட்டமைப்பினர் வழி வகுத்தனர்.

அவ்வாறான அலுவலகத்தில் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பதிவு செய்யவேண்டிய நிலைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் நடைபெறும் மனித உரிமைகள் அமர்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செல்ல உள்ளதாக அறிகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மனித உரிமைகள் பேரவைக்க செல்வது கண் துடைப்புக்காகவே அன்றி எமது பிரச்சினைகளிற்கு தீர்வை பெற்று தருவதற்காக அல்ல.

அரசுக்கு கால அவகாசம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் துணையாக செயற்பட்டுவிட்டு, இன்று கண்துடைப்பிற்காக அங்கு சிறிதரன் செல்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகங்களையே மக்களிற்கு செய்கின்றது. தமிழரசு கட்சியினால் ஐ.நா.தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கண்துடைப்பிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.

இத்தனை காலமும் அரசுடன் இணைந்து அவர்கள் செயற்பட்டுவிட்டு இன்று எமக்காக பேசுவது போன்றதான நாடகத்தினை அரங்கேற்ற முனைகின்றனர். நாங்கள் ஒருபோதும் இலங்கை அரசை நம்ப போவதில்லை. எமக்கு நீதியை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும். சர்வதேச நீதி பொறிமுறைகள உருவாக்கப்பட்டு, இலங்கை அரசு மேற்கொண்ட அத்தனை குற்றங்களிற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஐ.நா அமர்விற்கு விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள்கள் சார்பில் நாமும் ஐ.நாவில் குரல் கொடுக்க உள்ளோம். அவ்வாறு பயணிக்க முடியாத சந்தர்ப்பத்தில் நாம் எழுத்து மூலமான அறிக்கையினை சமர்ப்பிப்போம் – என்றார்

பகிர்ந்துகொள்ள