தற்போதைய அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தடை செய்யப்படும் நிலை ஏற்படலாம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்தமுறை பெற்ற ஆசனங்களை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய தேவை, உள்ளது.அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். ஜனாதிபதி இந்த நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வந்துள்ளார்.
பொதுத் தேர்தலில், அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும், சரி கிடைக்காவிட்டாலும் சரி, அவரது செயற்பாடுகள் முழுவதும் இராணுவ மயமாக்கலாகவே இருக்கும்.
சில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தடை செய்யப்படக் கூடிய நிலை ஏற்படலாம். இந்த ஜனநாயகமற்ற செயற்பாடுகளை எதிர்கொள்வதாக இருந்தால், நாம் ஒரு பலமான சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்” என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்மக்களுக்கான ஆக்கபூர்வமான எந்த செயற்பாடுமற்று அடிவருடி அரசியல் நடத்தி வரும் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பு ஏற்கனவே தன்னலங்களுக்காக தடைசெய்யப்பட்டு இருப்பதை யாரும் மறுக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.