கூட்டுச்சதியை முறியடிப்போம் தாயகமண்ணை மீட்ப்போம்! த.ஒ.கு-நோர்வே

You are currently viewing கூட்டுச்சதியை முறியடிப்போம் தாயகமண்ணை மீட்ப்போம்! த.ஒ.கு-நோர்வே

பதின்மூன்றாவது சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்வது ஈழத்தமிழரது உரிமை மீட்புப்போரை நிரந்தரமாகத் தோற்கடிக்கும் பேராபத்தேயாகும்.
கூட்டுச் சதியை முறியடிப்போம்! தாயக மண்ணை மீட்டெடுப்போம்!

இலங்கைத்தீவில் சிங்கள பௌத்தப் பேரினவாத அரசால், திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு இனவழிப்புக்கு உள்ளாகி அழிந்துவரும் பூர்வகுடித் தமிழ்தேசிய இனத்தை, சிங்கள அரசு 13 ஆம் சட்டத்திருத்தத்தை முழுமையாக, ஏற்று நடைமுறைப்படுத்தினாலும், தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த, உதவப் போவதில்லை.

 
ஈழத்தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தொன்று தொட்டுத் தனித்துவமான நாகரிகம், பண்பாட்டைக் கொண்ட இனமாக எமது தாயக மண்ணில் எம்மை நாமே ஆண்டுவந்த பூர்வீகக்குடிகள் என்பதை உலகறியும். இன்று எமது உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இலங்கைத்தீவில் இனவழிப்பிற்குள்ளாகி நிற்கின்றோம்.

 
நாம் பறிக்கப்பட்ட எமது உரிமைகளை மீட்பதற்காக போராடி வருகின்றோம். எமது போராட்ட வரலாற்றில் அயல்நாடான இந்தியாவின் தலையீடும், அதனைத்தொடர்ந்து தமிழர்களுடன் ஆலோசிக்காது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் தமக்குள் செய்து கொண்டதுவே இந்திய – இலங்கை ஒப்பந்தமாகும். இலங்கைத்தீவில் இவ் ஒப்பந்தம் என்றுமே முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதில் எந்த ஒரு இடத்திலும் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்புக்கு நிறைவான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. ஆதலால் ஈழத்தமிழர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

 
தற்போது இந்தியத் தலையீட்டுக்காக இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்குக் கடிதம் எழுதிய தமிழ்க்கட்சித் தலைவர்கள் ஈழத்தமிழரது அரசியல் உரிமையை தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதிலிருந்து குறுக்கி 13 ஆவது சட்டத்திருத்தத்துடன் திருப்திப்பட்டுக்கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு இருக்கின்றார்கள். 13 ஆவது திருத்தத்தைக் கேட்பதுடன் நின்றுவிடவேண்டும் என எண்ணும் சிங்களத் தலைமைகளைத் திருப்திப்படுத்தவே இந்தச் சதிமுயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

 
தமிழ்த் தேசிய அரசியலை 13 வது திருத்தச் சட்டத்தை ஆரம்பப் புள்ளியாக ஏற்றுச் செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து மீட்டு எடுத்துப் பாதுகாப்பது தமிழ் மக்களினதும், தமிழ்ச் சமூக அமைப்புகளினதும் வரலாற்றுக் கடமையாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்த ஒரு ஏற்பாடும் தமிழ்த் தேசிய இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஏற்புடைய ஓர் ஆரம்பப்புள்ளியாக அமையாது. கடிதம் எழுதியவர்களும் கை எழுத்துப் போட்டவர்களும் புதிய வேடதாரிகளாக புதிய புனைவுக்கதைகளுடன் வலம் வரப் புறப்பட்டுவிட்டார்கள்.

 
பெரும் இனவழிப்பிற்கு உள்ளாகி உலக அரங்கில் நீதிகோரும் ஈழத்தமிழர்களை, அவர்களின் சர்வதேச நீதிகோருதலை மறுதலிக்கின்ற ஒற்றையாட்சி சிங்கள பௌத்த பேரினவாத அரசினுள் தமிழர்கள் ஒரு இனக்குழு என்ற வரைவிலக்கணத்துள் கட்டுண்டு கிடக்கவேண்டும் என்று கருதுகின்ற அனைத்துச் சக்திகளினதும் இந்தக் கூட்டுச்சதியினை ஒன்றிணைந்து முறியடிப்போம்.

எமது தாயகவிடுதலைப் போராட்டப்பாதையில், இடையே வரும் இதுபோன்ற தடைகளை இனங்கண்டு அகற்றி தமிழ்த் தேசிய இனமாக எழுச்சிகொள்வோம். தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை என்ற அடிப்படைக் கோட்பாட்டில் அணிதிரண்டு தமிழர்தாயகமாம் தமிழீழத்தை மீட்கும்வரை ஒன்றிணைந்து, போராடுவோம்.

 
எம் இன விடுதலைக்கான போராட்ட வழித்தடத்தில் விதையான வீரர்கள், பொதுமக்களின் இலட்சியப் பாதைக்கு மதிப்பளிப்பவர்களாக எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply