கூட்டு இமயமலைப் பிரகடனம்” மீதான கண்டனமும் கொள்கைவிளக்கமும் -IDCTE

You are currently viewing கூட்டு இமயமலைப் பிரகடனம்” மீதான கண்டனமும் கொள்கைவிளக்கமும் -IDCTE

கூட்டு இமயமலைப் பிரகடனம்” மீதான கண்டனமும் கொள்கைவிளக்கமும்”

உலகத்தமிழர் பேரவைக்கும் (GTF) சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் (SBSL) என்றழைக்கப்படும் புத்த பிக்குகளின் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற

கலந்துரையாடலில் “இமயமலை பிரகடனம்” எனும் திட்டத்தின் மூலம், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் சிறிலங்கா சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு பிரகடனத்தை ஏற்படுத்தியதாக ஒரு செய்தி, இந்த வாரம் சிறிலங்காவின் சனாதிபதி ஊடகப் பிரிவினால் பரப்பப்பட்டது.

சர்வதேச சமூகத்தைத் தவறான வழியில் நடத்தும் நோக்கில், உலகத்தமிழர் பேரவைக்கும் (GTF) சங்க புத்த பிக்குகளின் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல், சிறிலங்கா அரசாலும் அதன் ஊடகப்பிரிவினராலும் மிக தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட செய்தி, சர்வதேச நாடுகளின் முன்பாக சிறிலங்கா அரசின் தலையிடாத கொள்கையை முன்வைப்பதாக கூறி சிறிலங்காவிற்குச் சாத்தியமான செல்வாக்கை முன்வைக்கிறது. இதனால் தமிழ் மக்கள் சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த விடயத்தைத் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் கருத்திற் கொள்ள வேண்டும்.

தமிழீழ மக்கள், சிங்கள மட்டும் சட்டம் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட, திட்டமிட்ட இனவழிப்பு என ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான அடக்குமுறைகளை அனுபவித்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக வன்முறையான அடக்குமுறை என்பது எமது மக்களின் இருப்பின் ஒரு பாகமாகவே மாறியது. தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்கள் தமது தன்னாட்சி மற்றும் சுய நிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக பல தசாப்தங்களாக அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டுப் பலனளிக்காது பின்னர் தம்மை தற்காத்துக்கொள்வதற்கு இதுவே ஒரு வழி என, ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். நிச்சயமற்ற சூழலில் ஊற்றெடுத்த இந்த எதிர்ப்பு மட்டுமே எமது மக்களின் குரலாக ஒலிக்கிறது.

உலகின் மிகக் கொடூரமான வன்முறைகளின் வடிவான தொடர் கொலைகள், துன்புறுத்தல்கள், கற்பழிப்புகள், கூட்டுக் கொலைகள், கடத்தல்கள், கைதுசெய்தல் என அனைத்தும் கடந்த 33 ஆண்டு கால போராட்ட வாழ்வில் எம் மக்கள் எதிர்கொண்டனர். கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் உச்சமாக மே 2009 இனவழிப்புப் போர் அமைந்திருந்தது.

இலட்சக்கணக்கான எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள், 2,40,000 மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டனர், அவர்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகில் அதிக மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் சிறிலங்கா முதலிடம் வகிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களினால் எமது மக்களைக் கொன்று குவிக்கும் ஒரே நோக்கில், முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வலையம் எனும் போர்வைக்குள் ஆதரவற்று நின்ற எமது மக்களை உள்வாங்கி கொன்று குவித்தனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை கேட்ட போதும், சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கான நிலைமை இருந்த போதும் அவை புறந்தள்ளப்பட்டு இவை அனைத்தும் நடந்தேறியது.

இந்த நிலைகளை ஆய்வு செய்ததில் எமது மக்களின் மீது நடத்தப்பட்டது ஒரு இனவழிப்பு தான் என்பது முடிவாகிறது. சர்வதேச விதிகளுக்குப் புறம்பாகக் கண்டிக்கத்தக்க வன்முறைகளை மேற்கொண்டோரை சர்வதேச சமூகத்திற்கு முன் கொண்டு வந்து அவர்களுக்கான தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதும், எம்மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பிற்கான தீர்வினைப் பெறுவதும் மிக அவசியம் என உணர்ந்து, எமது மக்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.கடந்த காலங்களில் எமது மக்களின் குரலை வலுப்படுத்த சர்வதேச சமூகங்களுடன் நாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை பெறப்பட்ட எந்த பதில்களும் எமது தன்னாட்சி, சுய நிர்ணய உரிமையையோ, தமிழின அழிப்பிற்கான நீதியையோ பெற்றுத்தரும் வகையில் அமைவதாக இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட பூர்வமான தமிழ்ப் பிரதிநிதிகள் என இமயமலை பிரகடனத்தில் குறிக்கப்பட்ட பகுதி, தகுந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது, காரணம் தமிழ் மக்களால் வெளிப்படுத்தப்பட்ட எந்த ஒரு அடிப்படை உரிமைகளும் அப்பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக தமிழர் வரலாற்றில், சுதந்திர தமிழீழமே தமிழருக்கான தீர்வு என்று 1976 ல் நிறைவேற்றப்பட்ட வட்டுகோட்டைத் தீர்மானமும் அதை மீண்டும் உறுதிப்படுத்திய 2010 ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் எங்கும்

குறிப்பிடப்படவில்லை. இவர்களது முதல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருப்பதாகத் தெரியவில்லை, காரணம் இவர்கள் அறிக்கை விடும் அதே நேரத்தில் தாயகத்தில் போரில் இழந்த தம் உறவுகளுக்கு வணக்கம் செலுத்திய உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் கருத்து, ஒன்றிற்கு ஒன்று முரணாக இருப்பதை அறியமுடிகிறது.

இந்தக் கூட்டுப் பிரகடனத்தை தமிழ் அரசியற் கட்சிகள் வெளிப்படையாக நிராகரித்ததை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. தாயகத்தில் மட்டுமன்றி புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களும் ஒருசேர இதனைக் கண்டித்து, இந்த இமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழர் தாயகம் குறித்த எந்தவொரு அரசியற் தீர்வு தொடர்பான பேச்சுகளிலும், தாயகத்திலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் கருத்தின் முக்கியதுவத்தை உறுதிப்படுத்துவது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் எங்களின் பொறுப்பாகும்.

நீண்ட நெடுங்காலமாக எமது தமிழீழ மக்கள் எதிர்கொண்டுவரும் அநீதிகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில், எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணமான இனப்பிரச்சினையை நேரடியாக விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.அதை இமயமலைப் பிரகடனம் செய்யத் தவறிவிட்டது. இந்த முயற்சியானது தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கேள்விக்குறியாக்குவதாகத் தென்படுகிறது. தமிழ் மக்களின் நீண்ட கால வரலாறு. எண்ணங்கள், ஏக்கங்கள் மற்றும் சூழல்கள் தொடர்பான ஒரு தெளிவான பார்வை கொண்ட ஒரு இராசதந்திர ரீதியிலான உடன்பாடு அவசியமாகிறது. மேற்குறிப்பிட்ட காரணிகளை அங்கீகரிப்பதும் அதை கருத்திற் கொள்வதும், உடனடி பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலையான தீர்வுகளுக்கு வழி வகுக்கும் அடித்தளத்தை அமைக்கும். நீண்ட நெடுங்காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் வரலாற்று ரீதியான வன்முறைகளை சரிசெய்வதற்கு அடிப்படையான உண்மையான புரிந்துணர்வே நீடித்த அரசியல் தீர்வுக்கு உகந்த சூழலை வளர்ப்பதில் ஒருங்கிணைந்ததாக இருக்கும்.

தமிழர் தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பேச்சுக்களில் பங்குகொள்ள முனையும் பங்குதாரர்கள் நிச்சயமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு முன்செல்வது மிக முக்கியமானது

1. சர்வதேச சட்டங்களுக்கமைவாக தமிழர்களை ஒரு தனித்துவமான தேசமாக அங்கீகரிப்பது: சர்வதேச சட்டமைவுகளுக்கும் கொள்கைகளுக்கும் இணங்க தமிழரை ஒரு தனித்துவமான தேசமாக அங்கீகரிக்கவேண்டும்

2. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும்: தமிழ் மக்கள் தம்மைத் தாமே நிர்வகித்துக்கொள்ள, அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதே ஒரு நிலையான தீர்விற்கு வழிவகுக்கும்

3. ஒற்றையாட்சிக்கு உட்படாத தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வரும் தாக்கங்களுக்கான அரசியற் தீர்வை முதன்மைப்படுத்தல் : நடைமுறையில் இருக்கும் பேரினவாத சிங்கள பௌத்த அரசியலைமைப்பினால் ஏற்படும் தாக்கங்களைக் கருத்திற்கொண்டு. தீர்வுகளைக் காண்பதே இனங்களுக்கிடையேயான மோதலை சரிசெய்வதற்கு மிக இன்றியமையாத காரணியாகும். மகாவம்சத்தில் காணப்படும் புனைகதைகள் தீவில் வாழும் மக்களின் அடிப்படை வாழ்நிலையைப் பாதிக்கும். இது பற்றிய கருத்துக்கள் நிச்சயமாக ஆராயப்படவேண்டியவை.

4. சர்வதேச நாடுகளின் முன் தமிழ் இனப்படுகொலைக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்: தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலை ஆகவே, அதற்கான நீதியும், பொறுப்புக்கூறலும் வலியுறுத்தப்படவேண்டியவை.

இராசதந்திர ரீதியிலான சமாதான பேச்சுகளின் மூலம் நிரந்தரத் தீர்வை அடைய மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம், தமிழர் தாயகத்தை ஒரு தனித்துவமான தேசமாகவும்,தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் கருத்துக்களை கொண்ட அரசியற் பேச்சுக்களை நாம் வரவேற்கிறோம். சர்வதேச நாடுகளூடாக இதற்கான பரிந்துரையை பெற தீவிரமாக முயற்சிக்கிறோம். எவ்வாறாயினும், இப்பேச்சுகளின் வெற்றியானது தமிழர் தாயகத்தின் அடிப்படை அரசியற் பிரச்சனைகளை அங்கீகரிப்பதிலும் அவற்றிற்கான சரியான தீர்வுகளைக் காண்பதிலுமே தங்கியுள்ளது. இந்த அடிப்படை பிரச்சனைகளை அங்கீகரிப்பது, சமாதானப் பேச்சுகளில் எமது முழுமையான பங்களிப்பிற்கு வழிகோலும்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

சாரங்கன் கெங்கநாதன்

அரசியல்துறைப் பொறுப்பாளர்

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு தமிழீழம் (IDCTE)

கூட்டு இமயமலைப் பிரகடனம்” மீதான கண்டனமும் கொள்கைவிளக்கமும் -IDCTE 1
கூட்டு இமயமலைப் பிரகடனம்” மீதான கண்டனமும் கொள்கைவிளக்கமும் -IDCTE 2
கூட்டு இமயமலைப் பிரகடனம்” மீதான கண்டனமும் கொள்கைவிளக்கமும் -IDCTE 3
கூட்டு இமயமலைப் பிரகடனம்” மீதான கண்டனமும் கொள்கைவிளக்கமும் -IDCTE 4
பகிர்ந்துகொள்ள

Leave a Reply