கென்யா நாட்டில் உள்ள மகளிர் பள்ளியில் திடீரென ஏற்பட்ட மர்ம பாதிப்பால் 100 மாணவிகள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு கென்யாவின் காகமேகா நகரில் உள்ள எரேகி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென மாணவிகளுக்கு மர்ம பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல், முழங்கால் முட்டிகளில் வலி ஏற்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ள தகவலில், பாதிக்கப்பட்ட மாணவிகள் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனை சில மக்கள் வெகுஜன ஹிஸ்டீரியா அறிகுறிகள் என தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடக்க முடியாமல் இருக்கும் மாணவிகளை சக மாணவிகள் தூக்கி கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த திடீர் பாதிப்பால் கிட்டத்தட்ட 100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கல்வி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து இரத்தம், சிறுநீர் மற்றும் மலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிசுமு மற்றும் நைரோபியில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.