கடந்த அரசின் கைக்கூலிகளாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டனர். அதற்கு முக்கியமானவர் சுமந்திரனே. அரசின் அடிமைத்தனத்திற்குள் எமது மக்களை கொண்டு சென்றவர் அவர்தான் என வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
எனது மாணவனாகிய சுமந்திரனை நான் தனிப்பட்ட ரீதியில் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. அந்த தேவையும் எனக்கில்லை. எனினும் கொள்கையின் பொருட்டே நான் அவருடன் முரண்படுகிறேன்.
பொதுக் கொள்கையின் அடிப்படையில் நாம் யாருடனும் கூட்டு சேர்வதற்குத் தயாராக உள்ளோம். எனினும், சுயலாப அரசியலுக்காக தேர்தல் கூட்டு வைப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை. அரசுடன் இணைந்து செல்வதன் மூலம் எமது மக்களுக்கு செய்யாது விடுகின்ற விடயங்களை தட்டிக் கேட்க திராணி இல்லாமல் போகும்.
பூகோள அரசியல் நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு, ஜனாதிபதி கோட்டாபய மீதான வெறுப்பேயன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதால் அல்ல. கூட்டமைப்பினர் வெளிப்படையாக பரப்புரை செய்தமையும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது .அதேநேரம் தேர்தலை பகிஷ்கரிக்க கூறிய கஜேந்திரகுமாரின் முடிவும் முட்டாள்தனமானது.
நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டுபவர்கள், நாம் செய்த விடயங்களை கூறாது விடுவது வேடிக்கையானது. நாம் அந்த நேரத்தில் எதிர்கொண்ட சவால்களை பற்றியோ தடைகளை பற்றியோ அவர்கள் கூறுவதில்லை. அந்தத் தடைகளைத் தாண்டி அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் நாம் செயற்பட்டமை பலருக்கு தெரியாது. அரசிடம் இருந்து வந்த தடைகளை விட தமிழ் தலைவர்கள் சிலரிடம் இருந்து வந்த தடைகள் அதிகமானவை.
சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமது காலத்தில் முற்பட்ட போதும் எமக்கு அதிகாரம் கிடைக்கவில்லை. தேவைகளை முன்னிறுத்தி நல்லாட்சி அரசிடம் 12,000 மில்லியன் கேட்டபோது நமக்கு கிடைத்தது வெறும் 1,260 மில்லியன் மாத்திரமே என்றார்.
வடமாகாணசபையை இயங்க விடாமல் செய்ததில் எம்.ஏ.சுமந்திரன் முக்கிய பங்குவகித்ததும், அஸ்மின், சயந்தன், ஆர்னோல்ட் மற்றும் சில மாகாணசபை உறுப்பினர்களின் மூலம் மாகாணசபைக்குள் நிகழ்த்தப்பட்ட குழப்பங்கள் ஊர் அறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.