கைத்தொலைபேசி மூலம், மக்களின் நடமாட்டங்களை கண்காணிக்கும் நிறுவனங்கள்!

You are currently viewing கைத்தொலைபேசி மூலம், மக்களின் நடமாட்டங்களை கண்காணிக்கும் நிறுவனங்கள்!

பொதுமக்களின் கைத்தொலைபேசிகளை கண்காணித்து, மக்களின் தனிப்பட்ட விபரங்களை வேறு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் விற்கும் நிறுவனங்கள் தொடர்பில், நோர்வேயின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான “Nrk” எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோர்வேயின் பெருநகரங்களில் ஒன்றான “Stavanger” நகரில் வாழும் சாதாரண நோர்வே பிரஜையொயொருவரின் கைத்தொலைபேசி பின்தொடரப்பட்ட விடயத்தை உதாரணமாக காட்டியுள்ள மேற்படி தொலைக்காட்சி நிறுவனம், இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி நோர்வே பிரஜையின் கைத்தொலைபேசியின் மூலம், அவர் எங்கெங்கு சென்று வந்துள்ளார், அவரது நாளாந்த அசைவுகள் உள்ளிட்ட விடயங்களை, பிரித்தானியாவின் லண்டன் நகரை மையமாக கொண்டுள்ள “Tamaco” என்ற நிறுவனம் தெரிந்துகொண்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமையை மேற்படி தொலைக்காட்சி நிறுவனம் வெளிக்கொண்டு வந்துள்ளதையடுத்து, நோர்வேயின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு இது விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.

நாம் நாளாந்தம் பாவிக்கும் நவீன கைத்தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்துகொள்ளும் “பயன்பாடுகள் (Apps / Aplications) “அனைத்துமே, அவற்றை கைத்தொலைபேசிகளில் நாம் சேமிக்கும்போது, கைத்தொலைபேசிகளின் “புவியியல் நிலையை (Geo Position)” செயல்நிலையில் வைக்கும்படி கேட்கும்போது, அதன் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமலேயே, அதை அனுமதிப்பது தவிர்க்கப்படவேண்டும் என்பது முக்கியமானது.

இவ்வாறு, கைத்தொலைபேசிகளில் செயல்நிலையில் இருக்கும் “புவியியல் நிலை” அல்லது “Geo Position”, நமது கைத்தொலைபேசியில் அசைவுகளை வைத்து, நாம் எங்கெங்கு பயணிக்கிறோம் என்பதுபோன்ற தனிப்பட்ட விடயங்களையும் துல்லியமாக பதிவு செய்து, இயங்குநிலையில் இருக்கும் “பயன்பாடுகள்” அல்லது “Apps”, அவற்றை தயாரித்த நிறுவனங்களுக்கு கச்சிதமாக அனுப்பிவிடும். இந்நிறுவனங்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ளும் தரவுகளை, வர்த்தக நோக்கத்தில் இயங்கும் வேறு நிறுவனங்களுக்கோ அல்லது, தனிப்பட்ட ஒருவரை உளவு பார்க்க விரும்புபவர்களுக்கோ பெரும் தொகைக்கு விற்றுவிடுகின்றன.

இதன்மூலம், மக்களுடைய தனிப்பட்ட விடயங்கள், அவர்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள் கைகளில் சென்று சேரக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

இந்த விடயங்களை வெளிக்கொணரும் பொருட்டு, குறித்த பிரித்தானிய நிறுவனமான “Tamaco” நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதற்கு நோர்வேயின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமானது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக முயற்சித்த போதும், பிடி கொடுக்காத பிரித்தானிய நிறுவனம் ஒரு வழியாக சுமார் 3500 பவுண்டுகள் பணத்தை பெற்றுக்கொண்ட பின்பே, தொலைக்காட்சி நிறுவனத்தோடு தொடர்பில் வந்ததோடு, நோர்வேயில் கண்காணிக்கப்பட்டு பெறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுமார் 140000 கைத்தொலைபேசி தரவுகளை தமக்கு வழங்கியுள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைத்தொலைபேசிகளில் “புவியியல் நிலை” அல்லது “Geo Position” வசதியை செயல்நிலையில் வைப்பதால், கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும்போதோ அல்லது அவர்களுக்கு அவசர வைத்திய உதவிகள் தேவைப்படும்போதோ அவர்களது இருப்பிடத்தை கண்டறிவதற்கு இவ்வசதி இன்றியமையாததாக உள்ளதோடு, காவல்துறைகள், குற்றச்செயல்களை கண்டறிவது உட்பட, சிறு பிள்ளைகளின் நடமாட்டங்களை பெற்றோர் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இது உதவிகரமாக இருந்தாலும், அத்தியாவசிய நிலை ஏற்பட்டால் ஒழிய, கைத்தொலைபேசிகளின் “புவியியல் நிலை” அல்லது “Geo Position” பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள