வல்வெட்டித்துறை, தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. “இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை இப்போது மறுபடி மேலே உயர்த்துகிறோம்” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.சுடுகலன்கள் மேலே உயர்த்தப்பட்டன.வானத்தைக் கிழித்தபடி மரியாதை வேட்டுக்கள் செந்நிறமாகப் பயணித்தன. இந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டது.
நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில; பதினைநது பேர் கொணட் பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை. ஏனையவர்கள் ரவைகளைத் துணி முடிச்சில் கட்டியபடி, குண்டுகளுடன். 2ஆம் லெப் மாலதி, 2ஆம் லெப் கஸ்தூரி, வீரவேங்கைகள் விஜி, ஜெனா, தயா, ரஞ்சி தம்மிடம் உள்ளவற்றுடன் தயார் நிலையில். முன்னேறிவந்த இந்தியப் படைகளுக்கும், இவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கடும் சண்டை. ரவை முடிய முடிய நிரப்பி நிரப்பிச் சண்டை. பெரும் பலத்துடன் பெருந்தொகையில் வந்து நின்ற உலகின் அன்றைய நான்காம் வல்லரசுப் படைகளோடு நின்று சண்டையிட முடியாத களநிலைமை எம்மவர்களைக் கோப்பாய் சந்திநோக்கி, சண்டையிட்டவாறு பின்னகர்த்தத் தொடங்கியது. மாலதிக்குத் தொண்டையில் பெருங்காயம். நடக்க முடியவில்லை. இராணுவமோ நெருங்கிக்கொண்டிருந்தது. மாலதியை இழுத்துச் செல்ல விஜி முயற்சித்துக்கொண்டிருந்தார். முடியவில்லை. வல்லரசுப் படைகளுடனான போரில் தன்னால் இழப்பு வரக்கூடாது என்று முடிவெடுத்த மாலதி சயனைட்டை அருந்தினார். “என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு” என்றபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரானார். கருவி கைமாறியது கனவுகள் கைமாறின. மாலதி,தாய் நிலம் விடியும்எனும் கனவோடுமண்ணிலே நீ விழுந்தாய்.உன் பெயர் சொல்லிஎம் படையணி தன்னைஅண்ணன் வளர்த்தெடுத்தான்.(நன்றி – கவிதை அம்புலி) சூரியக் கதிர் – 01 எதிர் நடவடிக்கையின் முடிவில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணி, தன்னை 2ஆம் லெப். மாலதி படையணியாக உருமாற்றியிருந்தது.
சூரியக் கதிர் 02 நடவடிக்கைக்கு சிங்களப் படைத்தலைமை தயாரானது. 2ஆம் லெப். மாலதி படையணி வடமராட்சியின் வாதரவத்தை, கப்புதூ, மண்டான், வல்வை வெளி, தொண்டமனாற்றுச்சந்திப் பகுதிகளில் நிலைகொண்டது. சிங்களப் படையினரின் நடவடிக்கையில் தெரிந்த வேறுபாடு, அவர்களின் வரவு வாதரவத்தைப் பக்கமாக இருக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியது. எமது வேவு நடவடிக்கை தொடங்கியது. வாதரவத்தையின் வெளிப்புறக் காப்பரண்களைக் கடந்து எம்மவர்கள் உள்நுழைய, இரவைப் பகலாக்கும் மின் விளக்குகள் ஒப்பவில்லை. கப்டன் கோபியின் அணி மறுபடி மறுபடி முயன்றது. காப்பரண்களுக்கு முன்னால் நாட்டப்பட்டுள்ள கம்பங்களில் சில மின்விளக்குகள் எமது புறமாகவும், சில படையினரைப் பார்த்தபடியும் கட்டப்பட்டிருந்தன. எமக்கு எதிர்த்திசையில் கட்டப்பட்ட மின் விளக்கு ஒளிரும்போது எம் திசையிலிருக்கும் கம்பம் சிறுகோடாக நிழலை விழுத்தும். அந்த நிழலைப் பயன்படுத்திக்கூட பகையரணை நெருங்க பலமுறை முயன்றும் …… படையினர் நடவடிக்கையைத் தொடங்கப்போகின்றனர் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று நான்காவது நாள் எப்படியாவது போயாக வேண்டும். இப்போது முன்னிலவு. பின்னிருட்டு நள்ளிரவில் மின் பிறப்பாக்கி ஓய்வெடுக்கும் 10 – 15 நிமிட இடைவெளியைப் பயன்படுத்தி உள்நுழைந்து, நிலைமையை அவதானித்து திரும்பிவரும் முடிவை கோபி எடுத்தார். இது சரிவருமா, இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்க நேரமுமில்லை. இதை விட்டால் படைத் தளத்தினுட் புக வேறு வழியுமில்லை.
1996 ஏப்பிரல் 02 கோபியின் அணி நகர்ந்தது. முன்னணி அவதானிப்பு நிலையை அடைந்தது. சற்று நிதானித்து, மேலும் முன்னகர்ந்து தடைக் கம்பியை நெருங்க முன்பே வழியில் இராணுவம் எதிர்ப்பட்டது. முயற்சியைக் கைவிடமுடியாது. போகத்தான் வேண்டும். மெல்லப் பக்கவாட்டாக விலகி, மீண்டும் முன்னேற, மறுபடியும் இராணுவம் எதிர்ப்பட்டது. மீண்டும் பக்கவாட்டாக விலகி, முன்னோக்கி நகர முயல, மின்பிறப்பாக்கி ஓய்ந்தது. இனித் தாமதிக்க முடியாது. பத்து நிமிடங்களுள் உள்நுழைந்து வெளித்திரும்ப வேண்டும் ஓட்டத்தில் போய் முதலாவது தடைக் கம்பியை உள்நுழைவதற்காக உயர்த்திப் பிடிக்க, ஒருவர் உள்நுழைய முயல, தடைக் கம்பியிலிருந்து ஐந்து மீற்றர் முன்னே இராணுவம் நிற்பதைக் கண்ட கோபி, சைகை காட்டி, நகர்வை நிறுத்தினார். அதற்குள் மின் விளக்குகள் உயிர் பெற்றன. இனி ஒரு கணம் அங்கே நிற்பதும் தற்கொலைக்கு ஒப்பானது. இவர்கள்விலகத்தொடங்க சிறிலங்கா இராணுவம் சுடத்தொடங்க, இவர்களும் கைக்குண்டுகளை வீசியபடி சுட்டுச் சுட்டுப் பின்னகர, அந்த வெட்டை வெளிச்சண்டையில் கப்டன் கோபி 2ம் லெப்.மாலதி படையணியின் முதல் மாவீரராகி, இப்போது பத்தாண்டுகள்.
2ம் லெப்.மாலதியின் பெயரைச் சுமக்கும் படையணி, முதல் மாவீரர் கப்டன் கோபியைப் போலவே முடியாதென்று எதையும் விடாது, எங்கும் எப்போதும் முயன்றபடி. உண்மை வெற்றி – 01 எதிர் நடவடிக்கையின் ஆரம்ப நாட்களிலேயே கொம்பனிக்குரிய வேவு அணியில் ஒருவராக லெப்.தமிழ்பிரியா பயிற்றுவிக்கப்பட்டார். நிதானமும் அமைதியுமான இயல்பைக்கொண்ட அவருக்கு வேவு மிகவும் பொருத்தமான பணிதான். தாக்குதலணிகளின் காப்பரண்களைக் கடந்து முன்புறம் போய் இரவெல்லாம் சிங்களப் படைக்கு மிக அருகேயும், பகலில் சற்றுப் பின்னே வந்து உயரமான மரங்களில் ஏறி நின்று படையினரைக் கண்காணிப்பதுமான கடின வேவுப்பணியில் தமிழ்பிரியா ஈடுபட்டார். உருத்திரபுரம் புனித பற்றிமா கல்லூரியில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரை 1996.09.26 அன்று நாம் உட்புகுந்து தாக்கியழித்த நடவடிக்கையில் காயமடைந்த போராளிகளுக்கு வழிகாட்டிப் பின்னே நகர்த்திவிட்டு, மறுபடி முன்னேவந்து காயக்காரர்களைப் பின்னே கூட்டிப்போய் என்று, நடவடிக்கை முடியும் வரை இடைவிடாத நடைதான்.
மாபெரும் படை நகர்வொன்று சிங்களப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எப்படி, எப்போது எங்கே என்பது தெரியவில்லை. 2ம் லெப்.மாலதி படையணியின் கொம்பனி ஒன்று உடங்காவில் நிலைகொண்டிருந்தது. பரந்துபட்ட நிலப்பரப்பைக் கண்காணிப்பில் வைத்திருக்கப் போதிய ஆளணியில்லாததால் 2ஆம் லெப் மாலதி படையணியின் வேவு அணிகள் சம்பளங்குளம், ஒதியமலை, உடங்கா, தண்ணீர் முறிப்புப் பகுதிகளில் உலாவிக்கொண்டிருந்தன. உடங்காப் பகுதியில் இரு தடவைகள் சிறிலங்காப் படையினரின் வேவு அணிகளைச் சந்தித்து, எமது அணிகள் தாக்கியிருந்தன. இந்தா, அந்தா என்றிருந்தது சண்டை தொடங்கும் நாள். 1997.05.13 அன்று தொடங்கியது “வெற்றி நிச்சயம்” என்று பெயர் சூட்டப்பட்ட, சிங்களத்தின் தோல்வி நடவடிக்கை. உடங்கா வெட்டையில் நின்ற 2ஆம் லெப். மாலதி படையணியின் வேவு அணியையே வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படைகள் முதலில் சந்தித்தன. வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கையின் முதல் மாவீரராக லெப்.தமிழ்பிரியா வரலாற்றில் பொறிக்கப்பட்டார். “புளியங்குளச் சந்திப் பகுதியை வேறு படையணிகள் பாதுகாக்கும். சந்திக்கருகே இராணுவம் வந்து நிலைகொண்டு சண்டை பிடிக்குமானால், தளத்தைத் தக்கவைப்பது கடினம். நீண்டகாலம் புளியங்குளச் சந்தியை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்து நின்று, சண்டையிட்டு எதிரிக்குச் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அதை நீங்கள் போய் செய்யுங்கள்” என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். வீரர்களின் வாழ்வில் முடியாது என்று ஒன்று இருக்கின்றதா? புறப்பட்டது 2ஆம் லெப். மாலதி படையணி. நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்குக் கால் நடையாகவே வந்து சேர்ந்தது.
தலைவர் சொன்னபடி தளத்துக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்தது. வவுனியா – கிளிநொச்சி நெடுஞ்சாலையின் இருபுறமும் சிறகுகள் வடிவில் விரிந்து நின்று, புளியங்குளத் தளத்துக்குக் காப்பு வழங்கியது. தனக்கு முன்னே படையணியின் வேவு அணியினரை உலாவவிட்டது. 1997.06.23 அன்று அதிகாலை பெருமெடுப்பில் ராங்கிகள் இரைய, குண்டுவீச்சு விமானங்கள் கூவ, எறிகணைகளை மழையாக வீசியபடி முன்னேறி வந்த படையினரோடு முதலில் மோதியது மேஜர் அரசியின் தலைமையிலான ஐந்து வேவுப் போராளிகளே. பழைய காயங்கள், நோய் காரணமாக களமுனை மருத்துவ வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களை முன்னரங்குக்கு நகர்த்தி, முன்னரங்கில் நின்றவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தும் வரை வேவு அணி சண்டையிட, எல்லோரும் தயாரானதும் அவர்கள் பின்னகர, முன்னரங்கப் போராகளிகள் சண்டையிட்டனர். எறிகணைகளால் தூக்கி விசிறப்பட்டு மண்குவியல்களான காப்பரண்களைக் கைகளால் விறாண்டி விட்டுப் படுத்திருந்து அடித்தவர்களும், இயங்கு நிலைத்தடையேற்பட்ட கனரக ஆயுதங்களை சீர் செய்து, சீர் செய்து அடித்தவர்களும், காயங்களைக் கட்டிவிட்டுத் தொடர்ந்து நின்று சண்டையிட்டவர்களும் வெற்றியை எமக்கே உரித்தாக்கியிருந்தனர். காலை 5.00 மணியளவிலிருந்து மாலை 5.00 மணியளவு வரை தொடர்ந்த அந்தப் பெருஞ்சண்டையில் படையணி 2ம் லெப்.மாலதியின் பெயரையும் கப்டன் கோபியின் பெயரையும் நிலைநிறுத்தியிருந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலுப்பிய இரு பெரும் சமர்களான இந்திய இராணுவப் போரையும், வெற்றி நிச்சயம் நடவடிக்கையையும் எதிர்கொண்டு, முதல் மாவீரர்களை ஈகம் செய்த நிமிர்வில், இனிவரும் சமர்களையும் வெற்றிகொள்ளும் துணிவில், களமெங்கும் காத்திருக்கின்றது படையணி. “ஆயிரத்து நூற்று இருபத்தைந்து மாவீரர்களை மண்ணுக்கு ஈர்ந்து பெருமையோடு நிமிர்ந்துகொள்கின்றது படையணி” நினைவுப்பகிர்வு:- மலைமகள்.விடுதலைப்புலிகள் 129 இதழிலிருந்து .! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”