முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (12)எடுத்துக்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான AR 804/23 வழக்கானது, இன்று (12) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்ற அடிப்படையில் மன்றில் திகதியினை கோரியிருந்தனர்.
அதன் அடிப்படையில் மன்றானது சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்று குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது எனக் கூறியிருந்தார்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற கடந்த வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்தும் மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் , இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.