கொக்குத்தொடுவாய் வயல் நிலங்கள் ஆக்கிரமிப்பு – கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம்!

You are currently viewing கொக்குத்தொடுவாய் வயல் நிலங்கள் ஆக்கிரமிப்பு – கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக விவசாய நிலங்கள் பலவற்றையும், வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைக் கண்டித்து கரைதுறைப் பற்றுபிரதேசசபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் செப்டெம்பர் மாதத்திற்கான அமர்வு நேற்று (16.09.2021) இடம்பெற்றது. இந்த அமர்வில் சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை சிவலிங்கத்தினால் குறித்த கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

ஏற்கனவே கொக்குத்தொடுவாய் தமிழ் மக்களின் மணலாற்றுப் பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான பூர்வீக நீர்ப்பாசன பயிர்ச்செய்கை நிலங்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையோடு பெரும்பாண்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஞ்சியுள் மானாவாரி விவசாய நிலங்களையும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிக்க முனைவது கண்டிக்கத்தக்கது என சபை உறுப்பினர் சிவலிங்கம் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த கண்டனத் தீர்மானத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும், பிரதமர் மகிந்த ராஜபக்ச, முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் கதிர்காமுத்தம்பி விமலநாதன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன், முல்லைத்தீவு மாவட்ட கமநலசேவைத் திணைக்களப் பணிப்பாளர், முல்லைத்தீவு மற்றும் வெலி ஓயா பொலிசார் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளும் சபை உறுப்பினர் சிவலிங்கத்தினால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு கண்டனத் தீர்மானத்தினை உரிய தரப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதன் ஊடாக, இவ்வருட பெரும்போக நெற்பயிற்செய்கையினை கொக்குத்தொடுவாய் தமிழ் மக்கள் தடைகளின்றி மேற்கொள்ள உதவுமாறும் சபை உறுப்பினர் சிவலிங்கம் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தீர்மானத்தினை சபை உறுப்பினர் க.தவராசா வழிமொழிய ஏனைய சபை உறுப்பினர்களும் இக் கண்டனத் தீர்மானத்தினை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இக்கண்டனததீர்மானத்தினை உரியதரப்பினருக்கு தான் அனுப்பிவைப்பதாக தவிசாளர் க.விஜிந்தனால் தெரிவிக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply