ரஷ்யப்படைகளுக்கு எதிராக உக்ரைன் கொத்துக்குண்டுகளை பாவித்துள்ளதாக “The New York Times” செய்தி வெளியிட்டுள்ளது.
மனிதர்களுக்கு பேராபத்தை விளைவிக்கக்கூடிய கொத்துக்குண்டுகளை பாவிப்பதில்லையென சர்வதேச ஒப்பந்தத்தில் பல நாடுகள் கையெழுத்திட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவும், உக்ரைனும் இவ்வகையான குண்டுகளை தம்வசம் வைத்திருப்பதும், மேற்படி சர்வதேச ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளும் கைச்சாத்திடாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “The New York Times” ஊடகத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள ஆவணங்களின்படி, உக்ரைனின் “Husarivka” என்ற கிராமத்தில் நிலைகொண்டிருந்த ரஷ்யப்படைகளை விரட்டியடிப்பதற்காக உக்ரைனிய படைகள் ஆகக்குறைந்தது இரு தடவைகள் கொத்துக்குண்டுகளை பாவித்துள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது. மார்ச் மதத்தின் ஆரம்பத்தில் குறித்த கிராமத்தில் கடுமையான மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் அக்கிராமத்தை நோக்கி ஏவப்பட்ட கொத்துக்குண்டுகள் உக்ரைனுக்கு சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்த முடியுமெனவும் “The New York Times” மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனில் ரஷ்யா கொத்துக்குண்டுகளை பாவித்ததாக மேற்குலக நாடுகள் முன்னதாக கடும் சீற்றம் வெளியிட்டிருந்ததோடு, ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச ரீதியிலான கண்டனங்களை தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைனும் கொத்துக்குண்டுகளை பாவித்துள்ளதாக வந்துள்ள உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை தொடர்ந்து, ரஷ்யாவை கண்டித்த மேற்குலக நாடுகள், உக்ரைன் தொடர்பில் இவ்விடயத்தை எவ்வாறு கையாளப்போகின்றன என்பது கவனத்துக்குள்ளாகியுள்ளது.