கொரோனாவிற்கு பழைய தடுப்பூசி மருந்தும் சோதிக்கப்பட்டுவருகிறது !

You are currently viewing கொரோனாவிற்கு பழைய தடுப்பூசி மருந்தும்  சோதிக்கப்பட்டுவருகிறது  !

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மற்றொரு பழைய தடுப்பூசி மருந்தும் மாற்று மருந்தாக சோதிக்கப்பட்டுவருகிறது.

சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசநோய் (Tuberculose) தடுப்பு மருந்தை நோயாளிகளில் பரிசோதிக்கும் மருத்துவ ஆய்வை ஆஸ்திரேலிய நிபுணர்கள் தொடக்கியுள்ளனர். இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் நாடுகளும் இந்த முயற்சியில் இணைந்து கொண்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவப்பணியாளர்கள் பலநூறு பேருக்கு முன்கூட்டியே இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டு அவர்களில் வைரஸ் தொற்றின் வேகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸில் பஸ்தர் நிறுவனம்( Institut Pasteur) இந்த ஆய்வை நெதர்லாந்துடன் இணைந்து செய்கிறது.

உலகெங்கும் ஆண்டு தோறும் 130 மில்லியன் குழந்தைகளுக்கு அவை பிறந்து 2 மாதங்களில் ஏற்றப்படும் BCG என்கின்ற காசநோய்த் தடுப்பூசி, மனித உடலின் தற்காப்பு சக்தியைப்(immune) பலப்படுத்து வதன் மூலமாக மிக மோசமான சுவாசத் தொற்று நோயான காச நோயிலிருந்து பாதுகாக்கிறது. தற்போது உலகில் காசநோயின் பரவல் தணிந்து விட்டதால் இந்த தடுப்பு மருந்தின் உற்பத்தியும் கையிருப்பும் குறைந்துவிட்டது.

இப்போது இது கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகளையும் குறைக்கும் என்பது பூர்வாங்க சோதனைகளில் கண்டறியப் பட்டுள்ளது.

ஏற்கனவே பிரான்ஸூம் அமெரிக்காவும் குளோரோகுயின் வகை மருந்துகளை மருத்துவர்களின் கண்காணிப்புடன் ஆஸ்பத்திரிகளில் வைத்து கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதை அனுமதித்துள்ளன.

இதேவேளை, குளோரோகுயின் மருந்தை தன்னிச்சையாக உட்கொண்டு சிகிச்சை பெற முயன்ற பலர் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

(நன்றி: குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள