கொரோனா தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு விதங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், கொரோனா போல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 400 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் தொடர்ச்சியாக இருப்பதன் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் குறித்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு விதங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா போல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ உருவாக்கியுள்ளனர். அதன் மூலம், பொதுமக்கள் மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் மற்றும் துணியால் செய்யப்பட்ட நான்கு மாஸ்க் வழங்கப்படுகிறது.