இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ‘பிளாஸ்மா’ சிகிச்சை பெற்ற நபர் பூரண குணமடைந்துள்ளார். இந்த சிகிச்சை முறையில் 4 நாட்களில் அவர் குணமடைந்ததை அடுத்து செயறகை சுவாசக் கருவி உதவியின்றி சுவாசிக்க தொடங்கியுள்ளார்.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 4ம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள்படி பிளாஸ்மா சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் பிளாஸ்மாவை 49 வயது நபரின் உடலில் செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை முறையின் மூலம் அவர், 4 நாட்களில் குணமடைந்ததை அடுத்து சுவாசக் கருவி உதவியின்றி சுவாசிக்கத் தொடங்கியுள்ளார்.
அடுத்தடுத்த இரு சோதனைகளிலும் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சாதாரண தங்குமிடத்துக்கு மாற்றப்பட்டு அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.