கொரோனா தவறுகள் ; சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது!

  • Post author:
You are currently viewing கொரோனா தவறுகள் ; சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது!

ஈரானில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. அதன்படி அங்கு இந்த உயிர்க்கொல்லி வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் நிலைகுலைந்துள்ள ஈரான், கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. பொருளாதார தடையால் ஈரானில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை நீடிப்பதாக கூறப்படுகின்றது.

இதனிடையே அங்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய அதே வேளையில், சாராயம் குடித்தால் இந்த வைரசில் இருந்து தப்பிக்கலாம் என்ற வதந்தியும் நாடு முழுவதும் வேகமாக பரவியது.

இதனை நம்பி மக்கள் சாராயத்தை தேடித்தேடி வாங்கி குடிக்க தொடங்கினர். பெரும்பாலான பகுதிகளில் மக்கள் ‘மெத்தனால்’ (Metanol – CH3OH) என்ற வேதிப்பொருள் கலந்த சாராயத்தை குடித்தனர். மனிதர்களின் உடம்பில் Metanol கலந்தால் அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உடல் உறுப்புகளையும் செயலிழக்க செய்ய வாய்ப்புள்ளது.

சில வேளைகளில் இதய நோய், குருட்டுத்தன்மை மற்றும் கோமா போன்றவற்றுக்கும் வழிவகுக்கும்.

ஆனால் இவை அனைத்தையும் தெரிந்தும் கொரோனாவை குணப்படுத்தும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் மக்கள் Metanol கலந்த சாராயத்தை வாங்கி குடித்தனர்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இப்படி விஷ சாராயம் குடித்த 30-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனாலும் மக்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படவில்லை.

தற்போதும் ஈரானில் மக்கள் விஷ சாராயம் குடித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கு விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.

இந்த தகவலை அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kianush Jahanpur) கூறியதாவது:-

பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தற்போது வரை 728 பேர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பார்வையை இழந்துள்ளனர்.

சுமார் 5,500 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும், பார்வை இழந்தோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள