“கொரோனா” வைரசு தொடர்பான உண்மையான தகவல்களை சீனா மறைத்து விட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறை கடந்த வாரத்தில் இதுவிடயம் தொடர்பான தனது அறிக்கையை அமெரிக்க அதிபரிடம் சமர்ப்பித்திருந்ததாகவும், சீனாவில் “கொரோனா” ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் பற்றிய உண்மையான தகவல்களை சீனா மறைத்து விட்டதாகவும் உளவுத்துறையின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவை தாக்கிய “கொரோனா” வைரசுக்களின் பரவலினால், சீனாவில் மொத்தமாக 82.361 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 3316 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சீனா அறிவித்துள்ள நிலையிலும், அமெரிக்காவில் 2.09.071 பேர் பாதிக்கப்பட்டும், 4633 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சீனாவில் முதன்முதலில் அவதானிக்கப்பட்ட “கொரோனா” வைரசு, அமெரிக்காவைவிட குறைந்தளவு பாதிப்புக்களையே சீனாவில் ஏற்படுத்தியுள்ளதென்ற கருத்து நம்பகத்தன்மை வாய்ந்தது அல்லவென அமெரிக்க அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவுத்துறையால் அமெரிக்க அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் உட்பட, மரணமானவர்களின் எணிக்கையையும் சீனா குறைத்தே வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமானவர்களின் தொகை தொடர்பில் பொய்யான தகவல்களை சீனா வழங்கியிருப்பதாகவும், உண்மையில் மிக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டும், மரணமடைந்தும் இருக்கலாமெனவும், “கொரோனா” வைரசு சீனாவில் முதன்முதலில் அவதானிக்கப்பட்டதாக சீனா குறிப்பிட்டுள்ள காலத்துக்கும் முன்னதாகவே “கொரோனா” வைரசு சீனாவில் அவதானிக்கப்பட்டிருக்கலாமென தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், எனினும் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவுகள் இதனால் பாதிப்படையாதெனவும் தெரிவித்துள்ளார்.