நோர்வே இராணுவத்தால் வடிவமைக்கப்பட்டு, பாவனைக்கு விடுக்கப்பட்டுள்ள, முற்றிலும் மூடப்பட்ட பாதுகாப்பான படுக்கைகளில் “கொரோனா” நோயாளிகளை காவிச்செல்வதற்கான இடவசதி, நோர்வே அவசர உயிர்காப்பு (Ambulance) உலங்குவானூர்திகளிலோ அல்லது மருத்துவ விமானங்களிலோ இல்லாமையால், நோர்வேயின் தனியார் விமான சேவையான “Widerøe” நிறுவனத்தின் விமானங்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
“கொரோனா” நோயாளிகளை பாத்திரமாகவும், அதேவேளை அடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையிலும் பாதுகாப்பாகவும் காவிச்செல்வதற்கான முற்றிலும் மூடப்பட்ட விசேட படுக்கைகளை நோர்வே இராணுவம் வடிவமைத்து பாவனைக்கு விடுத்திருந்தது.
எனினும், அளவில் மிகப்பெரியதான இந்த படுக்கைகளை காவிச்செல்வதற்கு நோர்வேயின் அவசர உயிர்காப்பு பிரிவினரிடமுள்ள உலங்கு வானூர்திகளிலோ அல்லது சிறியரக விமானங்களிலோ இடவசதி போதாமலிருப்பதாக சுட்டிக்காட்டப்பதையடுத்து நோர்வேயின் தனியார் விமானசேவையான “Widerøe” நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் இப்பணியில் களமிறக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிறுவனத்தின் “Dash-8” இரக பயணிகள் விமானங்களின் இருக்கைகள் அகற்றப்பட்டு, விசேட படுக்கைகள் பொருத்தப்பட்ட நிலையில் இவ்விமானங்கள் “கொரோனா” நோயாளிகளை காவிச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நோர்வேயின் அவசர உயிர்காப்பு பிரிவினருக்கு தற்போதுள்ள வேலைப்பளுவின் மத்தியில் மேற்படி விமான சேவையின் விமானங்கள் உதவியாக வந்திருப்பதையிட்டு தாம் மகிழ்வடைவதாக நோர்வேயின் அவசர உயிர்காப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மலைகளையும், பிரமாண்டமான கற்பாறைகளையும் கொண்ட நோர்வேயின் புவியியல் அமைப்பின் காரணமாக, பெரிய விமானங்கள் தரையிறங்க முடியாத இடங்களுக்கான விமானசேவையை மேற்படி “Widerøe” நிறுவனம் தனது சிறியரக விமானங்கள் மூலமாக வழங்கிவரும் நிலையில், தற்போதுள்ள அவசரகால சூழ்நிலையில், பயணிகளுக்கான சேவைகளை குறைத்திருக்கும் இந்நிறுவனம், தரித்து வைக்கப்பட்டிருந்த தனது விமானங்களை, நோர்வேயின் அவசர உயிர்காப்பு பிரிவினரின் பாவனைக்காக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி: