கொரோனா பரிசோதனை : தவறான முடிவை காட்டியதால் பரிசோதனையை நிறுத்த அறிவுறுத்தல்!

  • Post author:
You are currently viewing கொரோனா பரிசோதனை :  தவறான முடிவை காட்டியதால் பரிசோதனையை நிறுத்த அறிவுறுத்தல்!

தவறான முடிவை காட்டியதால், கொரோனா தொற்றை எளிதில் கண்டறிய உதவும் நவீன கருவி பரிசோதனையை 2 நாட்கள் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருக்கிறதா? என்பதை விரைவில் கண்டுபிடிக்க உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற நவீன துரித பரிசோதனை கருவிகளை மத்திய அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்து, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து இருக்கிறது. தமிழக அரசு தனிப்பட்ட முறையிலும் இந்த கருவிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இந்த சிறிய கருவியில் உள்ள ஒரு குமிழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் விரல் நுனியில் இருந்து சேகரிக்கப்படும் ஒரு துளி ரத்தத்தையும், மற்றொரு குமிழில் ‘கண்ட்ரோல் சொல்யூஷன்’ என்ற திரவத்தையும் ஒரு துளி வைக்கவேண்டும். கருவியில் உள்ள திரையில் ஒரு கோடு மட்டும் வந்தால் அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், 2 கோடுகள் வந்தால் கொரோனா தொற்று உள்ளது என்றும் அர்த்தம். இந்த பரிசோதனையின் முடிவு 25 நிமிடங்களில் தெரிந்து விடும்.

கொரோனா தொற்றை கண்டறிய பல்வேறு மாநிலங்களிலும் கடந்த இரு நாட்களாக இந்த நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த கருவி மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதில் 95 விழுக்காடு முடிவுகள் தவறாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று பேட்டி அளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை யின் தலைவர் மருத்துவர் ராமன் கங்காகேத்கரிடம், நவீன பரிசோதனை கருவியின் முடிவு தவறாக இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

இது தொடர்பாக ஒரு மாநிலத்திடம் எங்களுக்கு புகார் வந்து இருக்கிறது. இதுபற்றி 3 மாநில அரசுகளுடன் இதுவரை நாங்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். கொரோனா நோய்த் தொற்றை கண்டறிய துரித பரிசோதனை கருவி மூலம் நடத்திய சோதனைக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. எனவே துரித பரிசோதனை கருவிகளை சோதனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு அதன்மூலம் பரிசோதனை நடத்துவதை நிறுத்தி வைக்குமாறும் மாநிலங்களை நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கருவிகள் மூலம் எங்கள் மருத்துவ குழுவினர் சோதனை நடத்தி, கருவிகள் உபயோகிக்கும் நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்வார்கள். அதன்பிறகு தெளிவான ஆலோசனையை நாங்கள் 2 நாட்களில் வழங்குவோம்.

நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருவிகளில் ஏதாவது கோளாறு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை திரும்ப பெற்றுக் கொண்டு அவற்றுக்கு பதிலாக வேறு கருவிகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கேட்டுக் கொள்வோம்.

செவ்வாய்க்கிழமை வரை 4 லட்சத்து 49 ஆயிரத்து 810 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை மட்டும் 35 ஆயிரத்து 852 பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள 201 ஆய்வுக்கூடங்களில் 29 ஆயிரத்து 776 பரிசோதனைகளும், 86 தனியார் ஆய்வுக்கூடங்களில் 6,076 பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

சுகாதார துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் அடங்கிய இணையதளம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. இதில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபாடுவர்களை பற்றிய தகவல்கள் பிரிவு வாரியாக இடம்பெற்று உள்ளன.

பகிர்ந்துகொள்ள