இந்தோனோசியாவில்(Indonesia) கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கெபு (Kebo) என்ற கிராமம் வித்தியாசமான முயற்சியை கையாண்டு வருகிறது.
இந்தோனேசியாவில் இதுவரை 4,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் ஒரே தீர்வாக காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு நோயின் தீவிரமும், சமூக விலகலின் முக்கியத்துவமும் இன்னும் புரியவில்லை என்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்தோனேசியாவில் உள்ள கெபு (Kebo) என்ற கிராமம் ஒரு நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த அக்கிராமத்தில் இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பேய் போல வேடமிட்டு தெருக்களில் வலம் வருகின்றனர்.
இந்தோனேசியாவில் ‘போகாங்’ என்ற பேயை அந்நாட்டு மக்கள் நம்பி வருகின்றனர். அங்கு தற்போது வரை மக்கள் மத்தியில் பேய்கள் தொடர்பான மூட நம்பிக்கை காணப்படுகிறது. அந்த அச்சத்தை பயன்படுத்தி கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தக் கிராமத்தின் தலைவர் முடிவெடுத்து இந்த முறையை பின்பற்று கின்றனர்.
கெபு (Kebo) கிராமத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், அவர்கள் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் கிராமத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். பேய்களின் மீது நம்பிக்கை உள்ள அக்கிராம மக்கள் வெளியே வராமல் இருப்பதாகவும், இதன் மூலம் சமூக விலகலை எளிதாக கடைபிடிக்க முடிகிறது என்றும் கூறியுள்ளனர்.