கனடா, மொன்றியலில் உள்ள மூதாளர் பராமரிப்பு இல்லமான “Residence Herron” இல், அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 130 மூதாளர்கள், “கொரோனா” தொற்று பயம் காரணமாக, அங்கு பணியாற்றிவந்த பணியாளர்களால் கைவிடப்பட்ட அவலநிலை தொடர்பாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
மேற்படி மூதாளர் இல்லத்தில் தங்கியிருந்த மூதாளர் ஒருவர் “கொரோனா” வால் பீடிக்கப்பட்டதால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானதை தொடர்ந்து, அந்த இல்லத்துக்கு கனேடிய சுகாதாரத்துறையினர் வரவழைக்கப்பட்டபோதே மேற்படி சம்பவம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய சுகாதாரத்துறையினர், மேற்படி “Residence Herron” என்ற மூதாளர் பராமரிப்பு இல்லத்துக்கு சென்றபோது, அங்கிருந்த 130 மூதாளர்களை பராமரிப்பதற்கு 2 பணியாளர்களை மாத்திரமே இருந்ததாகவும், அங்கு பணிபுரிந்த ஏனைய பணியாளர்கள் “கொரோனா” பயத்தினால் மூதாளர்களை கைவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்ததாகவும், அங்கிருந்த மூதாளர்கள் உணர்ச்சியற்ற நிலையிலும், உடம்பில் நீர்ச்சத்து இல்லாத நிலையிலும், பல நாட்களாக உணவின்றி பட்டினியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், சில மூதாளர்கள் தத்தமது மலக்கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததாகவும், சில மூதாளர்கள் தமது படுக்கையிலிருந்து நிலத்தில் தவறி வீழ்ந்த நிலையில் இருந்ததாகவும், இன்னும் சில மூதாளர்கள் தத்தமது படுக்கைகளிலேயே இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சோகமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போதுள்ள அவசர நிலையில், குறித்த மூதாளர் இல்லத்துக்கு யாரையும் பார்வையிட வரவேண்டாமென மூதாளர் இல்லத்து நிர்வாகத்தினால் விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளையடுத்து, அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த மூதாளர்களின் உறவினர்கள் யாரும் அங்கு செல்லாத நிலையில், மேற்படி சம்பவம் உறவினர்களிடையே கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மூதாளர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவரின் மகன் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தனது தாயார் தன்னோடு 07.04.20 அன்று தொலைபேசிமூலமாக தொடர்புகொண்டபோது, வயிற்றோட்டம் காரணமாக தனது தயார் அவரது சக்கர நாற்காலியில் இருந்தபடியே மலம் கழித்துவிட்டதால், தனக்கான உதவியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவசர அழைப்பை ஏற்படுத்தி 3 மணிநேரம் கழிந்த நிலையிலும் தாயாருக்கான உதவிகள் கிடைக்கப்பெறவில்லையெனவும், செய்தியறிந்தவுடன், குறித்த இல்லத்தின் பணியாளர்களோடு தொடர்புகொள்ள தான் மேற்கொண்ட முயர்ச்சிகளேதும் பலனளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனடாவின் பெரும்பான்மையான மூதாளர் இல்லங்கள் தனியாரினாலேயே நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, குறித்த இந்த “Residence Herron” என்ற மூதாளர் இல்லத்தை நடத்திவருபவர் ஏற்கெனவே போதைப்பொருள் வர்த்தகம், பணமோசடி, வருமானவரி ஏய்ப்பு போன்றவற்றுக்காக தண்டனை பெற்றவரான தெரிவித்திருக்கும் கனேடிய ஊடகங்கள், இவ்வாறான தவறான பின்புலம் கொண்ட ஒருவர், மூதாளர் இல்லம் நடத்துவதற்கான அனுமதி எப்படி வழங்கப்பட்டதென கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், கனேடிய பிரதமர், “Justin Trudeau”, கனேடிய இராணுவத்தை சேர்ந்த 125 வைத்தியர்களையும், மேலும் சுகாதாரப்பணியாளர்களையும் குறித்த மூதாளர் இல்லத்துக்கு அவசரகதியில் அனுப்பிவைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
காணொளி:
https://globalnews.ca/video/rd/a51332cc-7f6e-11ea-9ec4-0242ac110003/?jwsource=cl