“கொரோனா” வைரசால் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்தும், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும் வரும் இக்கட்டான நேரத்தில் பல்வேறு உலக நாடுகளும் தத்தமது இராணுவப்படைகளை உயிர்காப்பு பணிகளிலும், சுகாதார சேவைகளிலும் களமிறங்கியுள்ள.
இந்நிலையில், கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போர் என தற்போதைய சூழ்நிலையை வர்ணித்திருக்கும் நேச நாடுகளின் கூட்டமைப்பின் (NATO / நேட்டோ) தலைவரும், முன்னாள் நோர்வே பிரதமருமான “Jens Stoltenberg”, தற்போதுள்ள நிலையில் NATO படைகளை அவசர உயிர்காப்பு பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நேசநாடுகளின் கூட்டமைப்பின் 30 நாடுகளின் தலைவர்களோடு காணொளி மூலமான சந்திப்பை நடத்தவிருக்கும் கூட்டமைப்பின் தலைவர், தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில், கூட்டமைப்பின் படைகளை “கொரோனா” வைரசை எதிர்த்துப்போராடும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தொடர்பில் ஆராயப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
“NATO” வின் சரக்கு விமானமொன்று, அத்தியாவசிய மருத்துவ உதவிகளோடு துருக்கியிலிருந்து இத்தாலி மற்றும் ஸ்பெயின் நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் “கொரோனா” நோயாளிகள் ஜேர்மனிக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் “Jens Stoltenberg” மேலும் தெரிவித்துள்ளார்.