“கொரோனா” வைரசை கட்டுப்படுத்தும் மருந்து 3 மாதங்களில் தயார்! நோர்வே ஆய்வக ஆலோசனை மையத்தின் தலைவர் நம்பிக்கை!!

You are currently viewing “கொரோனா” வைரசை கட்டுப்படுத்தும் மருந்து 3 மாதங்களில் தயார்! நோர்வே ஆய்வக ஆலோசனை மையத்தின் தலைவர் நம்பிக்கை!!

சர்வதேச மருந்து நிறுவனங்களின் ஆய்வகங்கள், “கொரோனா” வுக்கெதிரான மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அனைத்து ஆய்வுகளையும் ஒருங்கமைக்கும் பெரும்பணியை நோர்வே முன்னின்று நடத்தி வருகிறது.

தீவிரமாக நடைபெற்றுவரும் ஆய்வுகளின் பலனாக, இன்னும் மூன்று மாதங்களில், “கொரோனா” வைரசிலிருந்து உயிரை காத்துக்கொள்ளும் விதத்திலான மருந்தொன்று பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக நோர்வேயின் ஆய்வக ஆலோசனை மையத்தின் தலைவரான “John-Arne Røttingen”, நோர்வேயின் தேசியத்தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

வைரசினால் பீடிக்கப்படுபவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கவேண்டிய நிலையை குறைப்பதோடு, “கொரோனா” வைரசிலிருந்து உயிர்களை காத்துக்கொள்ளும் விதத்தில் இம்மருந்து அமையுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், தற்போது வரையான ஆய்வுகளின் தற்காலிக முடிவுகள் அதற்கான நம்பிக்கையை தந்திருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கொரோனா” வைரசு மனித உடலுக்குள் பிரவேசித்து, உடற்கலங்களுக்குள் ஊடுருவி பரவுவதை தடுப்பதற்கான மருந்து முதற்கட்டமாக உருவாக்குவதே அவசியமானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் உலகெங்குமுள்ள முன்னணி ஆய்வாளர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, “கொரோனா” வுக்கெதிரான மருந்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஆய்வாளர்களையும், ஆய்வுப்பணிகளையும் நோர்வேயிலிருந்தபடியே தலைமை தாங்கி ஒருங்கிணைத்துவரும் “John-Arne Røttingen”, அடிப்படையில் மருத்துவராகவும், தொற்றுநோய்கள் தொடர்பான அறிவு மிகுந்தவராகவும் விளங்கும் அதேவேளையில், நோர்வேயின் ஆய்வக ஆலோசனைமையத்தின் இயக்குனராகவும் விளங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள