இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 79 பேர் முழு உடல்நலன் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 149 பேருக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாற்குறையை போக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கும் வகையில் விரைவு ரயில்களின் பெட்டிகள் தற்காலிக சிகிச்சை அறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஒடிசாவின் கமக்யா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் ஒன்றில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒன்பது தற்காலிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனையில் ஈடுபடுவதற்கு 30க்கும் மேற்பட்ட தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் இதுவரை 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
BBC