முடிவை மாற்றியது அரசு, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் வைத்தியசாலையாக மாறுகின்றது..
கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவுக்கு வருகை தரும் நோயாளர்களை தென்னிலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்து சிகிச்சை வழங்குவதற்கு சிங்கள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரத்தியேக இடங்களில் வைத்து பராமரிப்பதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான நோயாளர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடுத்து வைப்பதற்காக வத்தளை, ஹெந்தல லாந்துரு வைத்தியசாலையை இந்நாட்டின் முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஹெந்தல மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையிலேயே தற்போது கொரோன வைரஸ் வேகமாக பரவி வரும் நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு வரும் பயணிகளை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமானது என்பதும் ஏப்ரல் 21 தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னர் எழுந்த சர்ச்சை களையடுத்து அப்பல்கலைக்கழகத்தை அரசு சுவீகரிக்க வேண்டுமென பாராளுமன்ற தெரிவுக்குழு வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.