தென்னமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.
கொலம்பியாவில் தொற்று நோய் மூன்றாவது அலை மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகள் நோயாளர்களைச் சமாளிக்க முடியாது பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. ஒக்ஸிஜன் பற்றாக்குறையும் அதிக இறப்புக்களுக்கு வழிவகுத்துள்ளது.
இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் கொரோனா மரணங்கள் 100,000 என்ற மோசமான மைல்கல்லை கடந்துள்ளதாக கொலம்பிய சுகாதார அமைச்சு நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
50 மில்லியன் மக்கள் வாழும் கொலம்பியாவில் இதுவரை 39 இலட்சத்துக்கு அதிகமான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்று வரையான காலப்பகுதியில் 100,582 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கொலம்பியாவில் சமீபத்திய வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளதுடன், மரணங்களும் அதிகரித்துள்ளன. நாட்டில் முக்கிய மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களான மெடலின் மற்றும் காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவிர சிகிச்சை பிரிவுகள் முழுமையாக நிரம்பியுள்ளாதாக கொலம்பிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயக்க மருந்துகள், ஒக்ஸிஜன் மற்றும் ஏனைய அத்தியாவசிய மருந்துகளுக்கு நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தலைநகர் போகோடாவில் உள்ள சான் ஜோஸ் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சீசர் என்சிசோ தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ளவாறு தொற்று நோய் நிலவரம் மேலும் நீடித்தால் நெருக்கடி தீவிரமாகும் எனவும் அவா் எச்சரித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் தொடங்கிய மூன்றாவது அலை தீவிரமடைவதற்கு அரசுக்கு எதிராக அதிகளவானோர் கூடி முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களே காரணம் என கொலம்பிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நாட்டில் தினசரி 30,000 வரையான தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை அதிகபட்சமாக 648 கொரோனா மரணங்கள் பதிவாகின.
இதேவேளைவில் கொலம்பியாவில் 14.9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 4.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 35 மில்லியன் மக்களுக்கு அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி போட முடியும் என கொலம்பிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.