அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இவரது விஜயமானது மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி ஏற்பின் பின்னர் இலங்கை குறித்த அமெரிக்காவின் பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.
இதனடிப்படையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நுலாண்ட் கொழும்பு வருகிறார்.
இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வொஷிங்டன் தளமாகக் கொண்ட உலகளாவிய மூலோபாய ஆலோசனை மற்றும் வணிக இராஜதந்திர நிறுவனத்தின் மூத்த ஆலோசகரா பணியாற்றியுள்ளார்.
32 ஆண்டுகளாக அமெரிக்க இராஜதந்திர தூதவராக பணியாற்றியுள்ள விக்டோரியா நுலாண்ட் , ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் செயலாளர் ஜோன் கெரியின் கீழ் 2013 – 2017 வரை ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றினார்.
செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராகவும், 2005 – 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவிக் காலத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதராகவும் செயற்பட்டுள்ளார்.
மேலும் 2010 – 2011 வரை ஐரோப்பாவில் மரபு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் சிறப்புத் தூதுவராகவும் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் இருந்துள்ளார்.
2003 – 2005 வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நுலாண்ட் பணியாற்றியுள்ளார். அத்துடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பல்வேறு திட்டங்களில் ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு மூத்த இராஜதந்திர அதிகாரியை அமெரிக்கா இலங்கைக்கு அனுப்புகின்றது.
ஜனாதிபதி ஜோ பைடனின் முக்கிய செய்தியுடனேயே விக்டோரியா நுலாண்ட் இலங்கை வருவதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் வருகை இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தும் என இவரது விஜயம் குறித்து அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.