கொழும்பு சிறையில் தமிழ் இளைஞர்களுக்கு பாலியல் சித்திரவதை!

You are currently viewing கொழும்பு சிறையில் தமிழ் இளைஞர்களுக்கு பாலியல் சித்திரவதை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் சபையில் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஓரிடத்திற்கு வருமாறு அழைத்து, அவருக்கு முன்பாக முழந்தாளில் இருக்குமாறு கட்டளையிட்டு, அச்சுறுத்தி அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். அதன்போது அவர், ஜனாதிபதி எனக்கொரு அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதன்படி விரும்பினால் உங்களை விடுதலை செய்யலாம். அல்லது சுட்டுக்கொல்லலாம் என்று கூறியுள்ளார். அவ்வாறு துப்பாக்கி வைத்து வெறியாட்டத்தை அவர் நடத்தியுள்ளார்.

அந்தக் கைதிகள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களே ஆகும். 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட வில்லை.அவர்களுக்குரிய வழக்குகளும் முறையாக நடத்தப்படுவதில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தினர் முறையாக ஆஜராகியிருந்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பர்.

வேண்டுமென்றே இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று இவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழர் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

லொஹான் ரத்வத்தவின் தவறுக்கு அவரின் மற்றைய இராஜாங்க அமைச்சு நீக்கப்படவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அவரின் அனைத்து பொறுப்புகளும் பறி க்கப்பட்டு, அவரின் எம்.பி பதவியும் நீக்கப்பட வேண்டும். அத்துடன் அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். 12 ஆம் திகதி சம்பவம் நடைபெற்ற நிலையில் 18 ஆம் திகதியே சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன். அந்த 6 நாட்களும் விசாரணைகளை தடுத்தவர்கள் யார் என்ற கேள்விகள் எழுகின்றன .

இதேவேளை கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் 29 ஆம் திகதி இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் 541 நாட்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையின் கீழ் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களிடம் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் ஊடாக வாக்குமூலம் பெற வேண்டும் என்ற போதும் அவ்வாறு இன்றியே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்து 540 நாட்களின் பின்னர் மறியல் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் மூன்று நாட்களின் பின்னர் மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் போது நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் ஆண்குறி மற்றும் மலவாசல் என்பன மிகவும் கேவலமான முறையில் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவொரு பாலியல் சித்திரவதையே.

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் போது போதைப் பொருள் இருக்கின்றது என்று சோதனை நடத்தப்படுகின்றது என்றால் எப்படி அவர்களால் அதனை கொண்டு சென்றிருக்க முடியும். அப்படியென்றால் அதிகாரிகள்தான் அதனை கொடுத்திருக்க வேண்டும். அதன்படி தினமும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களை வீதியில் வைத்து நிர்வாணமாக்கி சோதனையிட வேண்டும். அவ்வாறு செய்யாது கைதிகளை இப்படி நடத்துவது இது பாலியல் சித்திரவதை நடவடிக்கை என்று கூறுவதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி ஐ.நா. பொதுச் செயலாளரை சந்தித்த போது, காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழை வழங்குவதாக கூறியுள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, அவருடைய இராணுவத்தில் சரணடைந்த பல்லாயிரக் கணக்காணவர்களுக்கு என்ன நடந்தது என்று உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று இந்த அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம் என்று ஜெனிவாவில் வாக்குறுதியளித்திருந்தது.

ஆனால் அந்தப் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கபப்படவில்லை. அதனை நீக்க வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது. இன்னும் அந்த சட்டத்தில் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply