ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பதவியை நாளை இராஜினாமா செய்வதாக உறுதியளித்துள்ள அவர், நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது என்ற காரணத்தினால் அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்த அவர், 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்திருந்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு பாதுகாப்பான பயணத்தை நாடிய அவரின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, கொழும்பை தளமாகக் கொண்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ சிகிச்சைகளுக்கு மாத்திரமே அமெரிக்க விசா வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.