யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் இராணுவக் காவலரன் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவேந்தல் நடத்தப்படும் இடத்தில் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் இன்று நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இந்த இராணுவம், பொலிஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை நடத்த நீதிமன்றத் தடை உத்தரவு கோரப்பட்ட போதும் அந்த விண்ணப்பம் வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக மாவீரர் துயிலும் இல்ல இராணுவ முகாமுக்கு முன்பாக இராச பாதை வீதியில் இராணுவக் காவலரண் நேற்றிரவு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதம் தாங்கிய படையினரும் அந்தப் பகுதியில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் யாழ்ப்பாணம் நகர பிரிகெட் முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாக இராச பாதையில் உள்ள காணி ஒன்றில் கடந்த 4 வருடங்களாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.