யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் சிறீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன.
இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாது, போலிச் சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளமையை பொலிஸார் கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து பொலிஸார் ஆலய மகோற்சவ காலத்தில் ஆலயத்தில் பணியாற்றிய 28 வயதான உதவி குருக்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரை தொடர்ந்தும் சிறீலங்கா பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அதேவேளை ஆலயத்தில் நகைகள் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என கடந்த வாரம் பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் சந்தேநபர் கைது செய்யப்பட்டு, கோயில் நகைகள் ஒரு தொகுதி மீட்ட்கப்பட்டதை அடுத்து பிரதேச மக்கள் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்