கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2024 கல்வியாண்டுக்கான) இன்று திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியது.
இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர்.
ஆலயங்களில் வழிபட்ட பின்னர் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்குச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
பரீட்சை நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பெற்றோரிடம் ஆசிர்வாதங்களைப்பெற்று மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைந்ததை காணமுடிந்தது.

வவுனியா
வவுனியா மாவட்டத்தில் உள்ள இருவலயங்களில் இருந்தும் இம்முறை 4,396 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 2,405 பேரும், தனியார் பரீட்சார்த்திகள் 1991 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்காக வவுனியாவில் 40 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குறித்த பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவு
முல்லைத்தீவில் 2,879 பாடசாலை பரீட்சார்த்திகள், 535 தனியார் பரீட்சார்த்திகளும் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 33 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 11 இணைப்பு காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 474,147 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும்
தோற்றவுள்ளதாகவும் , விசேட தேவையுடையோர், கைதிகளுக்கும் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
