இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 6வது நாளில், காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனை சடலங்களால் நிரம்பி, இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காஸா மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். அக்டோபர் 6ம் திகதி ஹமாஸ் தொடுத்த எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது
நாளும் பல எண்ணிக்கையிலான மக்கள் சடலங்களாக மீட்கப்பட்டு வருவதாகவும், தற்போது பிணவறைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
காஸா நகரில் அமைந்துள்ள சிஃபா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 30 சடலங்களை மட்டுமே பாதுகாக்க முடியும். ஆனால் தற்போது நிலைமை அபாயகரமாக உள்ளது எனவும், டசின் கணக்கான சடலங்களை மருத்துவமனைக்கு வெளியே குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பாதுகாத்து வருவதாகவும், உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, மருத்துவமனை வளாகமே தற்போது சடலங்களால் கல்லறைத் தோட்டம் போன்று காட்சியளிப்பதாகவும் மருத்துவ ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அக்டோபர் 6ம் திகதி இஸ்ரேலின் இரும்பு வேலிகளை தகர்த்து கொடூர தாக்குதலை ஹமாஸ் படைகள் முன்னெடுத்ததில், இதுவரை 1,200 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக காஸா மீது தரைவழி தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அப்படியான ஒரு சம்பவம் நடந்தால், பலி எண்ணிக்கை பல ஆயிரம் கடக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
இதுவரை காஸா பகுதியில் 1,400 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் 60 சதவீதம் பேர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் எனவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி 340,000 பேர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
வியாழக்கிழமை காஸாவில் அமைந்துள்ள ஜபலியா அகதிகள் முகாம் மீதான வான் தாக்குதலில் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஹமாஸ் படைகள் மீது மட்டுமே தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கையும், காயங்களுடன் தப்பியவர்களுக்கான மருத்துவ சிகிச்சையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதனிடையே, மிசாரம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையும், உணவு விநியோகமும் இஸ்ரேல் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.