இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்திருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எனும் கட்டமைப்புக்குள் அரச சட்டவாதி செயற்படும் முறை மிகமுக்கியமான காரணமாகும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட இலங்கையின் ஆட்சியியல் தொடர்பான ஆய்வறிக்கையில், நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய விசாரணைகளின் சுயாதீனத்தன்மை தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி சுயாதீனமான அரச சட்டவாதி இல்லாமை குறித்தும், இது நாட்டின் தற்போதைய கட்டமைப்பு வலுவிழந்திருப்பதைத் தெளிவாகப் புலப்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைவடைந்திருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எனும் கட்டமைப்புக்குள் அரச சட்டவாதி செயற்படும் முறை மிகமுக்கியமான காரணம் என்று நாம் பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டிவருகின்றோம்.
மேலும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுவந்த இந்த விடயம், தற்போது சர்வதேச நாணய நிதியத்தினாலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. சட்டத்துறை சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் குற்றமொன்றை சட்டத்துக்கு அமைவாகக் கையாளல் ஆகிய இரண்டு பணிகளை சட்டமா அதிபர் முன்னெடுப்பதானது வெளிப்படையாகத் தெரியக்கூடிய முரண்பாடொன்றைத் தோற்றுவித்திருக்கின்றது.
அதேபோன்று தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுமுழுதாக பொருளாதாரக்காரணிகள் மாத்திரமன்றி, நாட்டின் ஆட்சியியல் கட்டமைப்பில் ஏற்பட்ட தோல்வி பெருமளவுக்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றது.
அதன்படி குற்றங்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க வகையிலும், பக்கச்சார்பின்றியும், நம்பகத்தன்மை வாய்ந்த முறையிலும் தண்டனை வழங்குவதற்கான இயலுமையின்மை இலங்கையின் ஆட்சியியல் கட்டமைப்பில் நிலவும் பிரதான குறைபாடாகக் காணப்படுகின்றது.
எனவே இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியியல் தொடர்பான ஆய்வறிக்கையில உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மிகக்கவனமாக ஆராயப்பட்டு, உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட தனித்தவொரு கட்டமைப்பாக அரச சட்டவாதி அலுவலகத்தை ஸ்தாபிக்கவேண்டும் என்பது நாட்டின் முக்கிய அரசியல் கோரிக்கையாக மாறவேண்டும் என்று அவ்வறிக்கையில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.