சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை. அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்க்கவும் இல்லை. அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை.
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுவாஸ் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி எங்களுடைய பூர்வீக பிரதேசம். இது சைவத்தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி. இந்த காணிக்குள் வந்து சட்டவிரோதமான விகாரையை அமைத்திருக்கின்ற படியால்தான் நாங்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இங்கே தமிழ் மக்களுடைய பூர்வீக காணிக்குள் வந்து சட்டவிரோதமான விகாரையை அமைத்திருப்பதை தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இங்கே சைவக் கோயில் இருந்ததற்கான வரலாறு உள்ளது.
ஒரு சாதாரண சிங்கள குடிமகன் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு விரும்பி வந்து வடகிழக்கிலே காணி வாங்கி வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த உரிமை அனைவருக்கும் இருக்கிறது.
ஆனால் திட்டமிட்ட வகையில் இன அழிப்பு செய்கின்ற நோக்கோடு, தங்களுடைய மக்களுடைய அடையாளத்தை தகர்ப்பதற்காக வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்ப்போம். அந்த நோக்கோடு வருகின்ற விகாரைகளையும் எதிர்ப்போம்.
அந்த வகையில் நாங்கள் தையிட்டி விகாரையை எதிர்க்கின்றோம். எதிர்த்துக் கொண்டே இருப்போம் ஏனென்றால் இது எங்களுடைய இனத்தினுடைய எதிர்கால இருப்பு சம்பந்தப்பட்ட விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.