சந்திரனில் மனிதர்கள் வாழமுடியுமா என்ற ஆய்வுகள் முனைப்படைத்து வரும் நிலையில், மனிதர்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான நீர், ஒட்சிசன் போன்ற இன்றியமையாத விடயங்கள் சந்திரனில் இருக்கிறதா என ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
உயிர்வாழ்வதற்கு தேவையான ஒட்சிசனை, சந்திர மண்டலத்தில் படிந்திருக்கும் தூசிகளிலிருந்து உருவாக்க முடியுமா என்பதற்கான ஆய்வுகளை விஞ்ஞானிகள் இப்போது ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான “NASA” மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையமான “ESA” ஆகியவை, சந்திரனில் பல்வேறு ஆய்வு மையங்களை நிலைநிறுத்தியிருக்கும் நிலையில், சந்திரனில் படிந்திருக்கும் தூசியிலிருத்து ஒட்சிசனை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற ஆய்வில் இவை ஈடுபட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் “Appollo” விண்கலத்தில் சென்று, சந்திரனில் தரையிறங்கிய விண்வெளி ஆய்வாளர்கள் கொண்டுவந்ததாக சொல்லப்படும் சந்திரனில் எடுக்கப்பட்ட பாறைப்படிவுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அப்பாறைப்படிவுகளில் ஒட்சிசன் அதிகளவில் இருந்ததை அவதானித்தனர்.
இதனை அடிப்படையாக வைத்து, நெதர்லாந்தை தளமாக கொண்டிருக்கும் “ESTEC” என்ற விண்வெளி தொழினுட்ப ஆய்வு நிறுவனம், சந்திரனின் தூசிப்படிமங்களிலிருந்து ஒட்சிசனை தயாரித்து தரக்கூடிய முறையில் தொழிற்படக்கூடிய ஆய்வுநிலையமொன்றை சந்திரனில் அமைத்து ஆய்வில் இறங்கியுள்ளது.
அத்துடன், சந்திரனில் எடுக்கப்பட்ட பாறைப்படிவுகளில் இருந்து ஒருவிதமான உலோகத்தை தயாரிக்க முடியுமெனவும், அந்த உலோகத்தை பயன்படுத்தி, சந்திரனில் கட்டடங்களை உருவாக்க முடியுமெனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.