ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் தொடுத்தது. ஆனால், இருநாடுகளும் சமரசத்திற்கு வந்து தங்கள் தூதரக உறவை மீண்டும் தொடங்குவதாக கூட்டாக அறிவித்தன.
இந்த நிலையில், ஈரானின் சிஸ்டான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சரவான் நகரில் 9 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என பாகிஸ்தான் தூதர் முகமது முடாஸிர் திப்பி அடையாளம் காட்டியதன் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர், ”சரவனில் 9 பாகிஸ்தானியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த குடும்பங்களுக்கு தூதரகம் முழு ஆதரவை வழங்கும். இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க ஈரானுக்கு அழைப்பு விடுத்தோம்’ என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.