மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து நேற்றிரவு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போரதீவுப்பற்று பிரதேச செலயகத்திற்குட்பட்ட பொறுகாமம் சமுர்த்தி வங்கியில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த நிலக்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றில் சடலம் ஒன்று உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை அவதானித்ததை தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் நீதிபதியின் முன்னிலையில் சடலம் நீர் நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தற்போது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தார்.