இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது என்னென்ன விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்பது குறித்த எந்தவித தகவல்களையும் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு வெளியிடவில்லை.
எனினும் எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை, சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று காலை கொழும்பு வந்து சேர்ந்தார். அவருடன் மூவர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.