தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தர்
இந்தக் கூட்டத்தை தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சி ல நிமிடங்கள் உரையாற்றினார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பின்னர் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோர் உரையாற்றினர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரச தரப்பினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர்கள் விபரித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலிசப்ரி தெரிவித்தார். குறித்த கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா . சம்பந்தன்,
சந்திப்பு மிகவும் அருமையான கூட்டமாக இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னர் தான் நல்லிண்ணக்க கூட்டத்தை கூடுகின்றீர்கள் . இதற்கு நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். காணாமல்போனோர் தொடர்பில் இனி கதைக்க வேண்டாம். காணாமல் போனவர்களை கொன்றது நீங்கள். அதனால் இதைப் பற்றி கதைப்பதில் பிரியோசனம் இல்லை. அதனால் இந்த விடயத்திற்கு முடிவு கொடுப்பதைப் பற்றி யோசனை செய்யுங்கள். காணாமல்போனோர் காணாமல் போனோர் என்று தெரிவித்து காலத்தை நீடிக்கவேண்டாம்.
தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவியுங்கள் என்று எடுத்துக்கூறியுள்ளேன். அரசியல் தீர்வு, காணி தொடர்பான பிரச்சினை, அனைத்து மாவட்டங்களிலும் காணிகள் இராணுவத்தினர், வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் , மகாவலி திட்டத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாசி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் முழுக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன்
ஒரே நேரத்தில் மூன்று விடயங்களை பரிசீலிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“பல தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள், சிங்கள – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என எல்லோரும் இந்த கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தோம்.
75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப் பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் எங்களிடம் ஜனாதிபதி கேட்டிருந்தார்.
நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை எடுத்துக் கூறினோம்.
வடக்கு கிழக்கிலிருக்கும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கையாக இருந்தது.
இரண்டாவது சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை நாங்கள் பெறக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதாவது 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை, அதற்கமைவான மாகாண சபைகள் இயக்கம்.
அடுத்ததாக இதுவரை காலமும் பலவிதமான ஆவணங்களை நாம் தயாரித்திருக்கின்றோம். தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக – எவ்வாறு அவற்றை முன்வைத்து அவற்றைப் படித்து பார்த்து, எவ்வாறான ஒரு தீர்வை அரசியல் யாப்பு மூலம் கொண்டு வரலாம் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வரலாமா என்பது தொடர்பாகவும் ஒரு ஒரு தீர்வுக்கு வந்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையிலே நாங்கள் இந்த மூன்று விடயங்களையும் சம நேரத்தில் பரிசீலிக்க இருக்கின்றோம். அதற்கு அரசாங்கம் சரி என்று கூறி இருக்கிறது” என்றார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக நேற்றைய சர்வகட்சி கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், அடுத்து ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக இவை தொடர்பில் பேசி இறுதி தீர்மானம் எடுப்போம் எனும் முடிவோடு ஜனாதிபதி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
நாங்கள் மூன்று விடயங்கள் குறித்து பேசினோம். முதலாவதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசினோம்.
இது தொடர்பில் உடனடியாக உரியவர்களுடன் பேசி, ஜனவரி மாசத்திற்குள் உரிய தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி அளித்திருக்கின்றார்.
இரண்டாவதாக, ஏற்கனவே சட்டத்திலும் அரசியலமைப்பிலும் இருக்கின்ற அதிகார பகிர்வு சம்பந்தமான விடயங்களை எப்படியாக நடைமுறைப்படுத்துவது? மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலும் கருத்துக்களை முன் வைத்திருந்தோம்.
அதற்கு ஜனவரி மாத பேச்சின் போது அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கலாம் என்று பதில் கூறியிருக்கின்றார்.
மூன்றாவதாக, நீண்ட காலமாக இருக்கப் போகின்ற புதிய அரசியலமைப்பு சம்பந்தமான விடயங்களையும் எடுத்துக்கூறி இருந்தோம். அதிலே அதிகாரங்களை பகிர்வது உட்பட எல்லா விடயங்களையும் உள்ளடக்கியதாக நாங்கள் கோரிக்கைகளை முன் வைத்தோம்.
இதற்கு ஜனாதிபதி கூறிய பதில் “இதற்காக நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே பல அறிக்கைகள் இருக்கின்றன. இணக்கப்பாடுகள் இருக்கின்றன. வரைபுகள் கூட இருக்கின்றன.
ஆகவே அவற்றை எல்லாம் சேர்த்து எப்படியான விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது குறித்து ஜனவரி மாதத்திலேயே நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.
ஏனென்றால், அடுத்த வருடம் இடம்பெற இருக்கின்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு முன்னதாக நாட்டிலே இன நல்லிணக்கம் ஏற்படுமா? இல்லையா? என்பது குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று அவரே ஒரு காலக்கெடுவை வைத்திருக்கின்றார்.
ஆகவே ஜனவரி மாதத்தில் இடம்பெற இருக்கின்ற அந்தப் பேச்சு வார்த்தையில் இருந்து நாட்டிலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அல்லது முடியாதா என்று ஒரு முடிவுக்கு வரலாம்.
பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக தான் இது குறித்த முடிவை அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி எம்மிடம் கூறி இருக்கின்றார்.
ஆகவே மிகவும் குறைந்த காலகட்டமாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தினுள் இந்த விடயங்கள் சம்பந்தமாக பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைவரும் முயற்சி எடுப்போம் என்று கூறி இருக்கின்றோம்”
ஆக மொத்தத்தில் தமிழ்மக்களின் விடுதலை அரசியலை குழிதோண்டி புதைப்பதற்கு அங்கும் இங்கும் பதவிகளுக்காக பரிதவிக்கும் பரிவாரங்கள் கூடிக்கதைத்துள்ளனர். இந்த நிலைப்பாடு தமிழ்மக்களுக்கு நிரந்தரமான பேராபத்தை உருவாக்கியுள்ளது இதற்கு அடுத்தவனின் நிகழ்சி நிரலில் இயங்கும் இந்த கூட்டம் துணைபோயுள்ளது.