கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி வேண்டியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாகவும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பேரணியினுடைய நோக்கம், கொக்குத்தொடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக, சர்வதேச தரங்களுக்கு அமைவாக, சர்வதேச கண்காணிப்போடு அகழ்வுப் பணிகள் இடம்பெறவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே தமிழர் தாயகத்தில் பல்வேறுபட்ட புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன ஆனால் இற்றை வரை நீதி கிடைக்கவில்லை. அது கொக்குத்தொடுவாயிலும் தொடரக்கூடாது.
இங்கே வடகிழக்கு இன்றைய தினம் அடைக்கப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழர் தாயகம் திரண்டு முல்லைத்தீவிலே அணிவகுத்து கொண்டிருக்கிறது.
எங்களுடைய அபிலாசைகள் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும், கொக்குதொடுவாய் படுகொலைக்கு உடனடியாக நீதி வேண்டும், அந்தப் புதைகுழி தொடர்பாக உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும், உண்மைகள் வெளிக்கொணரப்படும் வரை எமது குரல்கள் ஓயப் போவதில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளோடு சேர்ந்து தமிழ் மக்கள் ஒன்று திரண்டு இருக்கின்றார்கள். இதனை சர்வதேசமும் இலங்கை அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என கோருகின்றோம் என்றார்.